Our Feeds


Friday, November 17, 2023

Anonymous

பாலஸ்தீன அப்பாவிகள் மீதான இன அழிப்பை நிறுத்தக் கோரி புத்தளத்தில் திரண்ட ஆயிரக் கணக்கான பொதுமக்கள்.

 



பலஸ்தீன காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல் மற்றும் இனப்படுகொலை என்பவற்றை கண்டித்து புத்தளத்தில் இன்று ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் பாரிய கண்டன ஆர்ப்பாட்டமும், பேரணியும் இடம்பெற்றது.


புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் உள்ள கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இந்த கண்டன பேரணி இடம்பெற்றது.


இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை நிறைவு செய்த பின் புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக ஒன்றுகூடிய புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக இருந்து கொழும்பு முகத்திடல் வரை இஸ்ரேலுக்கு எதிராக பல கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.


புத்தளம் பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை மற்றும் புத்தளம் அரசியல் தலைமைகளின் வழிகாட்டலில் பலஸ்தீன சுதந்திரத்திற்கான புத்தளம் மக்கள் அமைப்பினரால் இந்த கண்டன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த பேரணியில் புத்தளம் - கரைத்தீவு வீதி, புத்தளம் - மதுரங்குளி வீதி, பாலாவி - கற்பிட்டி ஆகிய வீதிகளில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களையும் சேர்ந்த மஸ்ஜித் நிர்வாகிகள், உலமாக்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், மதரஸா மாணவ, மாணவிகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.


 இவ்வாறு ஒரேநேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் புத்தளம் - கொழும் முகத்திடலில் ஒன்று கூடியமையால் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்களும் தடைப்பட்டன. எனினும், போக்குவரத்து பொலிஸார் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசல்களை சரிசெய்தனர்.


இதன்போது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், "உலக நாடுகளே, அடிப்படைத் தேவை மறுக்கப்பட்ட பலஸ்தீனத்தை காப்பாற்று", " வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசி அழிப்பதுதானா உன்னுடைய கோழைத்தனம்" , "பலஸ்தீனமே நற் செய்தியை பெற்றுக்கொள், வேத வாக்கு பெற்றுக்கொள்" இதுபோன்ற இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களையும், பதாதைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.


இதன்போது, ஒளிபெருக்கியின்றி மிகவும் அமைதியான முறையில் இந்த பேரணியை முன்னெடுக்குமாறு பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கினார்கள்.


அது மட்டுமன்றி, புத்தளம், வனாத்தவில்லு, கருவலகஸ்வெவ மற்றும் நுரைச்சோலை உள்ளிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும், பொலிஸாரும் , பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளும் புத்தளம் நகர் மற்றும் கொழும்பு முகத்திடல் உள்ளிட்ட பேரணி நடந்த பகுதிகளை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.


இதன்போது, காஸா மண்ணில் தொடருகின்ற சியோனிச அரச தீவிரவாதத்தின் இனச் சுத்திகரிப்பை கண்டித்து பலஸ்தீன சுதந்திரத்திற்கான புத்தளம் மக்கள் அமைப்பினரால் முன்னெடுத்த மக்கள் பேரணியை தொடர்ந்து புத்தளம் வாழ் பொதுமக்களினால் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பிரகடனம் செய்ப்பட்டு , கண்டன அறிக்கையும் வாசிக்கப்பட்டது.


தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளாலும் இங்கு வாசிக்கப்பட்டது.


ரஸீன் ரஸ்மின்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »