"பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட கனவான் உடன்படிக்கைகளை மீறி செயற்படும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் நயீமுல்லாஹ்வுக்கு எதிராக மக்கள் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் அன்ஸில் விஷேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், அவர் தெரிவித்துள்ளதாவது,
சகோதரர் நயிமுல்லா மஸீஹுத்தீன் அவர்களே..!
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட கனவான் உடன்படிக்கைகளை மீறி செயற்படும் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சகோதரர் நயீமுல்லாஹ்வின் நடவடிக்கைகள் பற்றி எமது கட்சி கடந்த 16ம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்தமைக்கு பதிலளிக்கும் வகையில், தங்களால் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிச் செயலாளர் நாயகம் என்ற வகையிலும், தங்களது அறிக்கையில் என்னைக் குறித்தும் விடயங்களை தாங்கள் குறிப்பிட்டுள்ளதனாலும் தங்களது அறிக்கைக்கு பதிலளிக்கும் கடப்பாடு எனக்கிருப்பதாக உணர்கின்றேன்.
கடந்த 2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தேர்தல் மூலம் உறுதிப்படுத்துவதற்கான முயற்சியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு தரப்பாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தரப்பாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் பிரமுகர்கள் ஒரு தரப்பாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரமுகர்கள் ஒரு தரப்பாகவும் இருந்து, அவர்களில் இருந்து வேட்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தனரே தவிர, தாங்கள் செயலாளர் நாயகமாக பதவி வகிக்கும் அன்றைய முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஒரு தரப்பாக ஒருபோதும் கருதப்பட்டிருக்கவில்லை என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
புத்தளம் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், புத்தளம் உலமா சபை மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில், முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்களிடையே எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சுயேட்சைக் குழுவாக போட்டியிடுவதான கலந்துரையாடலின் போதே, தங்களது மைத்துனர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம் தன்னிடம் ஒரு கட்சி இருப்பதாகவும், அதன் செயலாளர் நாயகமாக தாங்கள் செயற்படுவதாகவும் தெரிவித்து அக்கட்சியில் போட்டியிடுவதான கருத்தை முன்வைத்திருந்தார்.
ஆக தாங்களும், தாங்கள் செயலாளர் நாயகமாக செயற்படும் கட்சியும் இவ்வுடன்படிக்கையின் ஒரு தரப்பே அல்ல. இவ்வுடன்படிக்கையின்படி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒரு கருவியாக மாத்திரமே தாங்களும், தாங்கள் செயலாளர் நாயகமாக செயற்படும் கட்சியும் இங்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தீர்கள் என்பதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், புத்தளம் மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் பேச்சுவார்த்தையில் தனிப்பட்ட ரீதியாக நீங்கள் எந்த வகையில் தொடர்புபட்டிருக்கவில்லை. அத்துடன் தங்களது கட்சி புத்தளம் மாவட்டத்தில் சிறு அளவிலேனும் வாக்கு வங்கியினை கொண்ட ஒரு கட்சியாக அறியப்பட்டிருக்கவுமில்லை. அதுமட்டுமன்றி இவ்வாறான உடன்படிக்கைகளின் போது மிகவும் நம்பிக்கைக்குரிய 'அல் அமீனாக' இவ்வுடன்படிக்கையினை முன்னின்று மேற்கொண்டவர்களோ இவ்வுடன்படிக்கையின் தரப்பினர்களோ உங்களை அறிந்திருக்கவுமில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீமின் மைத்துனர் என்ற அடிப்படையிலும், அவர் அமைச்சராக இருந்த காலங்களில் அவரது பிரத்தியேக செயலாளராகவும், அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் அவரது பாராளுமன்ற செயலாளராகவும் செயற்பட்டவர் என்ற அடிப்படையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினராகவும் அதன் பதவி நிலை உறுப்பினராகவும் பதவி வகிப்பதன் அடிப்படையிலுமேயன்றி, இவ்வுடன்படிக்கையினை முன்னின்று மேற்கொண்டவர்களுக்கோ அல்லது இவ்வுடன்படிக்கையின் தரப்பினருக்கோ உங்களைப்பற்றி அறிமுகம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது என்பதனை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.
ஆக, புத்தளம் மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக செயற்பட்டவர்களில் றஊப் ஹக்கீமை தவிர நீங்கள் வேறு யாருடனும் தனிப்பட்ட முறையில் தொடர்பற்றவர் என்பதனால், இவ்வுடன்படிக்கையின் திறத்தவர்கள் றஊப்பின் வார்த்தையினை நம்பியே அன்றி, தங்களின் மீதான நம்பிக்கையில் இவ்வுடன்படிக்கையின் கருவியாக, தாங்கள் செயலாளார் நாயகமாக செயற்படும் அன்றைய முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் காரணமாகவே இவ்விடயத்தில் தங்களின் ஒவ்வொரு செயற்பாடு தொடர்பிலும் பதிலளிக்கும் கடப்பாடு றஊப் ஹக்கீம் அவர்களுக்கிருக்கிறது. அதன்படி இவ்விடயத்தில் தங்களின் ஒவ்வொரு செயற்பாட்டினாலும் ஏற்படும் விளைவுகளை அவரே பொறுப்பேற்க வேண்டும்.
றஊப் ஹக்கீம் அவர்களுக்கும் தங்களுக்கும் இடையில் கருத்து முறண்பாடு இருப்பதாக தாங்கள் அண்மைக் காலமாக கூறி வந்தாலும் கூட, இன்று வரை அவரது பாராளுமன்ற செயலாளராக நீங்களே செயற்பட்டு வருவதோடு, அதன் மூலமான வேதனத்தினையும் பெற்று வருகின்றமையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்ச பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் அதன் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும் தாங்கள் இன்று வரை விலகாமல் உத்தியோக பூர்வமாக அப்பதவிகளை வகித்து வருவதனை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தங்களின் செயற்பாடு தொடர்பில் முழுமையாக பதிலளிக்கும் பொறுப்பு றஊப் ஹக்கீம் அவர்களுக்கு இருக்கிறது என்பதனால், இவ்விடயத்தில் அவரை தொடர்படுத்தி நாம் கருத்து வெளியிட்டது ஒரு போதும்; முலங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடும் செயற்பாடாக அமையாது என குறிப்பிட விரும்புகிறேன்.
எமது கட்சியின் தீர்மானங்கள் தொடர்பிலோ, எமது கட்சியின் ஒழுக்காற்று விசாரனைகள் தொடர்பிலோ கருத்துத் தெரிவிக்கும் எவ்வித உரிமையும் இவ்வுடன்படிக்கையின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதனை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.
எமது கட்சி இருபதாம் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலோ அல்லது எமது கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களை மன்னித்து விடாமல் கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலோ கருத்து தெரிவிக்கும் எந்த விதமான தார்மீக உரிமையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட உறுப்பினராகவும், இவ்வுடன்படிக்கையின் ஒரு கருவியாகவும் தங்களுக்கு கிடையாது என்பதனை தங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
இருந்த போதிலும், எமது கட்சி எப்போதும் சமூகம் சார்ந்து நேர்மையான தீர்மானங்களையே எடுத்திருந்தது. எமது தலைவர் சிறையிலிருந்து வாக்களிப்பு நடைபெற இருந்த தினத்திலேயே பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எமது கட்சியின் காரியாலயத்தில் அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர், தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டபோது இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதான தீர்மானத்தினையே எமது கட்சி மேற்கொண்டிருந்தது.
இருப்பினும் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான போதுமான விடயங்கள் எம்மிடம் இல்லாதிருந்ததனாலேயே நாம் அப்போது அவ்விடயம் தொடர்பில் அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று விசாரனை மேற்கொண்டிருக்கவில்லை.
ஆனாலும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கட்சி முறையான தீர்மானத்தை மேற்கொண்டு, அது தொடர்பில் முறையாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின் கட்சியின் தீர்மானத்திற்கெதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு போதுமான விடயங்கள் எம்மிடமிருந்தமையால், அவ்விடயம் தொடர்பில் நாம் செயற்பட்டு அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி அவர்களுக்கெதிரான ஒழுக்காற்று விசாரனையை மேற்கொண்டிருந்தோம்.
எமது அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை நாம் கட்சியில் இருந்து நீக்கியது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காகவே அன்றி இருபதாவது திருத்தத்திற்காக வாக்களித்தமைக்காக அல்ல. அவர் இருபதாவது திருத்தத்திற்கெதிராகவே வாக்களித்திருந்தார். இவை பற்றியெல்லாம் பூரண அறிவில்லாது நீங்களாக கற்பனை செய்யும் விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எமக்கில்லை.
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான ஒழுக்காற்று விசாரனையின் போது விளக்கமளித்து, முதலில் விசாரனையில் கலந்து அவர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் வகையில் எமது அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செயற்பட்டிருந்தனாலேயே நாம் முதலில் அவர் தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தோம். ஆனால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்தேச்சையாக பல்வேறு காரணங்கள் கூறி காலத்தை இழுத்தடித்தனால் அவருக்கெதிரான ஒழுக்காற்று விசாரனை முற்றுப் பெற்றிருக்கவில்லை.
அதுமட்டுமன்றி, கடந்த மூன்று தசாப்த காலமாக கட்சியின் தீர்மாத்திற்கெதிராக செயற்பட்ட காரணத்தினால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரது பதவியும் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இல்லாமலாக்கப்படவில்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டவர்களாக, சட்டத்திற்கு முரணாக தங்கக் கடத்தலில் ஈடுபட்டு அதற்காக தனது பெயரிலேயே தண்டப் பணமும் செலுத்திய பாராளுமன்ற உறுப்பினரை அதற்காக கட்சியிலிருந்து நீக்குவதனூடாகவே நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் தீர்மானம் மேற்கொண்டு அதற்காக செயற்பட்டோம்.
ஆனால் கட்சியின் தீர்மாத்திற்கெதிராக செயற்பட்ட காரணத்தினால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹாபிஸ் நசீரின் பதவி நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக இல்லமலாக்கப்பட்டது எதிர்பாராத விடயமாகும்.
எமது கட்சிக்கும், நீங்கள் செயலாளர் நாயகமாக செயற்படும் கட்சிக்கும் இடையிலான உடன்படிக்கை என்பது சட்டத் தேவைக்கானது மாத்திரமேயன்றி, அங்கு உடன்பட்ட அனைத்து விடயங்களுக்கும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், புத்தளம் உலமா சபை மற்றும் புத்தளம் சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகள் சாட்சியாளர்களாக இருக்கின்றனர்.
எமது கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கான அதிகாரம் எமது கட்சிக்குரியது என்பதே எம்மிடையே எழுத்து மூலமாக மேற்கொள்ளப்படட உடன்படிக்கையின் சுருக்கமாகும். அதன்படி நாம் மேற்கொள்ளும் ஒழுக்காற்று நடவடிக்கையின்படி நியாயமற்ற கால தாமதிமின்றி செயற்பட வேண்டியது தங்களின் கடமையாக இருந்தது.
ஆனால், எமது கட்சி எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை விலக்கி, அது தொடர்பில் தங்களுக்கு அறிவித்து உடனடியாக நீங்களும் அவரை கட்சியிலிருந்து விலக்கி கடிதத்தினை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்புங்கள் என்று தங்களிடம் நேரடியாக கேட்டபோதும், உடனடியாக அக்கடிதங்களை அனுப்புவதாக எமக்கு வாக்களித்து விட்டு, எமது கட்சி சார்பில் தங்களை தொடர்பு கொண்ட அனைவரின் தொடர்புகளையும் அலட்சியம் செய்து, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு இடைக்கால தடை உத்தரவை பெறும் வகையில் அவருக்கு ஒரு வார கால அவகாசத்தை வழங்கி செயற்பட்டமையை நயவஞ்சகத்தனம் என்றல்லாமல் வேறு எவ்வாறு குறிப்பிட முடியும்.
நாங்கள் கோரிய கடிதத்தை நீங்கள் உரிய நேரத்தில் அனுப்பியிருந்தால், உச்ச நீதிமன்றத்தில் ஒரே தடவையில் முடிந்திருக்க வேண்டிய வழக்கை, ஒரு வார கால அவகாசம் வழங்கி மாவட்ட நீதிமன்றத்திலிருந்து கட்டம் கட்டமாக கொண்டு செல்லும் நிலையை நீங்கள் ஏற்படுத்தியமையை வேறு எவ்வாறுதான் குறிப்பிட முடியும்.
தொடர்புகளுக்கு அப்பால் இருந்த உங்களை, ஒரே கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற நட்பின் அடிப்படையில் நான் தொடர்பு கொண்ட போது, உங்களது தாமதத்திற்கும் நீங்கள் தொடர்புகளில் இருந்து வேண்டுமென்றே விலகி இருந்தமைக்கும் நீங்கள் கூறிய காரணங்கள் வெறும் சாக்குப் போக்காகவே எனக்குப்பட்டது. ஏனெனில் நீங்கள் கூறிய காரணங்களெதுவும் கடிதம் ஒன்றை தயார் செய்து அதில் ஒப்பமிட்டு உரிய முகவரிகளில் அதை ஒப்படைப்பதற்கு தேவையான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாதளவான காரணங்களல்ல. அத்துடன் அலிசப்ரி றஹீமினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவுக்கெதிராக செயற்படத் தேவையான ஆவணங்களை எப்போது தர முடியும் என்று கூட நீங்கள் உத்தரவாதமாக கூறாமால் தவிர்த்து வந்தீர்கள்.
மேற்கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில், தங்களின் இவ்வாறான அலட்சியப்போக்கு ஒன்றில் தங்களின் தனிப்பட்ட நலன் சார்ந்ததாக அல்லது றஊப் ஹக்கீம் அவர்களின் உத்தரவின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டுமென்றே நாம் கருத வேண்டியுள்ளது.
அவ்வாறல்லாவிடின், அலிசப்ரி ரஹீமினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவினை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் எதிர்கொள்வதற்கு தேவையான விடயங்களை உடனடியாக மேற்கொள்வதற்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கி உங்களது நேர்மையினை நிரூபித்துக்காட்டுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது