Our Feeds


Saturday, November 4, 2023

News Editor

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை


 அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பாடசாலைகளுக்கு சுற்று நிருபம் வெளியிடப்படும் என கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தினார்.

அடுத்த வருடத்திற்குள் பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மேல் டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கல்வி அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தர வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய நியமனங்களை வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு தொடர்பில் பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை பரிசீலித்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் இந்த தீர்மானத்தை வழங்கியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

காமினி சுபசிங்க, எம்.ஐ.எம்.மான்சி மற்றும் டபிள்யூ.எச்.ஆர்.பெர்னாண்டோ ஆகியோரால் இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு நியமிக்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள் எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளாக கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிபர் சேவையில் 4718 வெற்றிடங்களை நிரப்புவதற்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை நியமிக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி உயர் நீதிமன்றம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »