(ஏ.ஆர்.ஏ.பரீல்)
2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு இலங்கைக்கு 3500 கோட்டா வழங்குவதற்கு சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கான ஹஜ் விசாக்கள் எதிர்வரும் நோன்பு மாதத்தில் வழங்கப்படுமெனவும் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்சார் விடிவெள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், சவூதி அரேபியா இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா வழங்கவுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு இதுவரை 1300 பேரே விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ரத்து செய்து செலுத்தப்பட்ட பதிவுக் கட்டணங்களை விண்ணப்பதாரிகளுக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்கள் நியமனத்துக்கான நேர்முகப்பரீட்சைகள் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றன. அடுத்த வருட ஹஜ் யாத்திரையில் ஹஜ் முகவர்கள் பலர் ஒன்றிணைந்து யாத்திரிகர்களை அழைத்துச் செல்வது நிறுத்தப்படவுள்ளது. 50 யாத்திரிகர்களை கொண்ட முகவர்களுக்கே அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
ஹஜ் கட்டணம் தொடர்பில் ஹஜ் முகவர்களுடன் கலந்துரையாடி நியாயமான கட்டணமொன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினாலும், அரச ஹஜ் குழுவினாலும் தீர்மானிக்கப்படும்.
அடுத்த வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளவர்கள் தாமதியாது பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி திணைக்களத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்படுகின்றனர் என்றார்.