Our Feeds


Saturday, October 21, 2023

SHAHNI RAMEES

#VIDEO: இழக்கப்பட்ட தமது தாய் நாட்டை கோரியே பலஸ்தீனர்கள் போராடுகிறார்கள். - கம்மன்பில வலியுறுத்தல்

 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)  

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலை தோற்றுவித்த அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் முன்னிலை வகிக்கும் வரை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

உலகம் பாரதூரமான விளைவுகளை  எதிர்கொள்வதை தடுப்பதற்கு பிரிக்ஸ் அமைப்பின் நாடு இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20)  இடம்பெற்ற இஸ்ரேல் - ஹமாஸ்  தாக்குதல். பூகோள பாதிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை  முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இஸ்ரேல் - பலஸ்தீன போர் உலகளாவிய மட்டத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். இழக்கப்பட்ட தமது தாய் நாட்டை கோரியே பலஸ்தீனர்கள் போராடுகிறார்கள்.

பலஸ்தீனம் - இஸ்ரேல் போர் சூழலில் ஒருசில பலம் வாய்ந்த நாடுகள் ஒருதலை பட்சமாக செயற்படுவதால் மூன்றாம் உலக மகா யுத்தம் தோற்றம் பெறும் சூழல் காணப்படுகிறது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உலகில் மீண்டும் யுத்தமொன்று தோற்றம் பெற கூடாது. மனித குலத்தில்  அமைதி மற்றும் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது.

இஸ்ரேல் - பலஸ்தீனம் போர் நிறுத்தத்தை உடனடியாக அறிவித்து பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண ஐக்கிய நாடுகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு எமது பணிவான   வலியுறுத்தலை முன்வைக்கிறோம்.

இஸ்ரேல் - பலஸ்தீனம் பிரச்சினைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு முதல் அவதானம் செலுத்திய போதும் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பெற்றிப்பெறவில்லை.

இஸ்ரேல் - பலஸ்தீனம் முரண்பாட்டை தோற்றுவித்த  அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலை வகிப்பதால் இந்த பிரச்சினை பல்லாண்டு காலமாக நீண்டு செல்கிறது.

பலஸ்தீனத்தை விழுங்குவற்கு இஸ்ரேலுக்கு இடமளித்த பலம் வாய்ந்த தரப்பினர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்னிலை வகிக்கும் போது ஒருபோதும் தீர்வு காண முடியாது.

காஸா பகுதியில் மனித உரிமைகள் மீறப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். பட்டினியால் வாடுகிறார்கள். போர் குற்றங்கள் பலம் வாய்ந்த நாடுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது.

இஸ்ரேல் - பலஸ்தீனம்  மோதலுக்கு உடன் தீர்வு காணாவிடின் முழு உலகமும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும். ஆகவே உலக நலனுக்காக பிரிக்ஸ் அமைப்பின்  நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா,தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் தலையிட வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக வலியுறுத்துகிறேன் என்றார்.  



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »