Our Feeds


Saturday, October 28, 2023

Anonymous

VIDEO: ஐ.நா வாக்கெடுப்பில் பலஸ்தீனத்தை ஆதரித்து வாக்களித்தது இலங்கை | 120 நாடுகள் பலஸ்தீனுக்கு ஆதரவு!

 



இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன படையான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போர்க்களத்தில் இருந்து வரும் துயரச் செய்திகள் அனைத்து தரப்பு மக்களையும் கலங்கடிக்க வைப்பதாக உள்ளது.


கடந்த 7-ம் தேதி முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போராளிக்குழுவுக்கு மத்தியில் நடந்து வரும் போரில், 1,400 இஸ்ரேலியர்களும், 2,913 குழந்தைகள் உட்பட 7000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்திவருகிறது. மேலும், காஸா பகுதிக்குச் செல்லும் குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள், மருந்து பொருட்கள் என அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது.


இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், "இஸ்ரேலின் தொடர்க் குண்டு வீச்சு சர்வதேச மனித உரிமைச் சட்டம் மீறல். இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. 10 லட்சத்துக்கும் அதிகமானோரை தெற்கு காஸாவுக்கு இடம்பெயரக் கூறிவிட்டு அங்கேயும் குண்டுகளை வீசுகிறது.


கடந்த 56 ஆண்டுகளாகக் குடியேற்றங்களால் அவர்களின் நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதையும், வன்முறையால் பாதிக்கப்படுவதையும் கண்டுவரும் பாலஸ்தீன மக்கள், பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரணங்களின்றி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கவில்லை. ஹமாஸின் திடீர்த் தாக்குதல் பயங்கரமானதாகும். அதற்காகப் பாலஸ்தீன மக்களுக்குத் தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது" எனத் தெரிவித்திருந்தார்.


ஐ.நா பாதுகாப்பு பொதுச் செயலாளரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதிநிதி, அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரினார். இந்த நிலையில் தான் போரை நிறுத்த வேண்டும் என்ற ரஷ்யா, சீனா, அரபு நாடுகளின் தீவிர முயற்சிகளை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் தோல்வியடையச் செய்தன. 


ஆனால், நேற்று ஐ.நா பொதுச் சபையின் 10-வது அவசரக்கால சிறப்பு அமர்வு டென்னிஸ் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜோர்டான் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.


அதில், "காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போர் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காஸா மக்களுக்குத் தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, "பொதுமக்களின் பாதுகாப்பு, சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்" என்ற விவாதத்தின் அடிப்படையில், இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.


தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்த 195 நாடுகளில் 120 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராகவும், இந்தியா ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்களிக்காமலும் புறக்கணித்திருக்கின்றன. இந்தத் தீர்மானம் குறித்துப் பேசிய இந்தியா, "அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் கண்டனத்திற்குத் தகுதியானவை. பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களிடமும் எங்கள் எண்ணங்கள் உள்ளன.


அவர்களை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம். பயங்கரவாதத்துக்கு எல்லையோ, தேசியமோ, இனமோ தெரியாது. பயங்கரவாதச் செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றுபடுவோம், பயங்கரவாதத்தைச் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம். பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.


சர்வதேச சமூகத்தின் மனிதாபிமான முயற்சிகளையும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவும் இந்த முயற்சிக்குப் பங்களித்திருக்கிறது. வன்முறையைத் தவிர்த்து, நேரடி சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்தச் சபையின் விவாதங்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான செய்தியை வெளிப்படுத்தும். இராஜதந்திரம் உரையாடலுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.


"காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போர் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காஸா மக்களுக்குத் தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்ற குறித்த வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்த இலங்கை தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிட்டது.


இலங்கை எப்போதும் இரட்டை நாடு என்ற கோட்பாட்டில் இருப்பதை வலியுறுத்தியது. அதாவது இஸ்ரேல் தனியான நாடு போல் பலஸ்தீனமும் தனியான சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என்பதை இலங்கை ஐ.நா மன்றத்தில் வலியுறுத்தியதுடன், யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவாக தனது வாக்கை பதிவு செய்யது. 


இலங்கையின் நிலைப்பாடு பற்றி ஐ.நா வில் ஆற்றப்பட்ட உரையை இப்போது கேளுங்கள்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »