Our Feeds


Wednesday, October 4, 2023

Anonymous

எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது - பாராளுமன்றில் இம்தியாஸ் MP முறைப்பாடு.

 



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


பாராளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் சமர்ப்பித்தலின் போது எனது சிறப்புரிமை மீறப்பட்டிருக்கிறது. அதனால் இது தொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமை குழுவில் விசாரித்து நீதியை பெற்றுத்தர வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே  இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

பாராளுமன்ற உறுப்பினராக நான் முதன்முறையாக முன்வைத்த இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் குறிப்பிட வேண்டும். 

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக  பாராளுமன்றத்தில் எனது கடமைகளை செய்யும் போது வேண்டுமென்றே அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு  இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்குள்ள சிறப்புரிமைகள் பாரதூரமாக மீறப்படுவதையே சபையில் முறைப்பாடாக முன்வைக்கின்றேன்.

பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு சபை  நிலையியற் செயற் குழுவின் உத்தரவுகளை தொடர்ந்து நிறைவேற்றத் தவறுவது பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு வேண்டுமென்றே சவால் விடுவதாக அமையும்.

நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க,பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் கட்டளைச் சட்டங்களை திருத்துவதற்காக நான் மூன்று தனிநபர் சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக  பொதுச் செயலாளருக்கு 2021 ஜனவரியில் சமர்ப்பித்தேன்.

இந்த மூன்று தனிநபர் பிரேரணை சட்ட வரைவுகளும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை.

இந்த மூன்று  சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,பின்னர் கடந்த வருடம் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சினால் அது தொடர்பான அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அதன்படி, அது சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு  அனுப்பப்பட்ட போதும்,அந்த சட்டமூலங்களுக்கான உரிய அறிக்கைகள் 2023 ஜனவரி முதலாம் திகதி வரை  பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை.

 குறித்த சட்டமூலங்களுக்கான அறிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சிடமிருந்து ஆறு மாதங்களுக்குள் கிடைக்கப்பெறவில்லையென்றால் அந்த சட்டமூலத்தை  இரண்டாம் வாசிப்பிற்கான ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்க முடியும்.

அதன்படி, பாராளுமன்றம்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான எனது தனிநபர் சட்டமூலங்களை ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்குமாறு கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு தெரிவித்துள்ளேன். 

நான் சட்டமூலத்தை சமர்ப்பித்த சில மாதங்களுக்குப் பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பான அறிக்கை எனது சட்டமூலத்துடன் இணைக்கப்பட்டு, 2023 ஜனவரி 5 ஆம் திகதி சம்பந்தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை பெப்ரவரி 28,2023 அன்று பாராளுமன்றத்தின் பாராளுமன்ற  நிலையியற் குழுவால் பரிசீலிக்கப்பட்டது.அவ்வாறு பரிசீலித்த பிறகு,இரண்டு சட்ட வரைவுகள் உள்ளதால்,இரண்டு தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அமைச்சுக்கு குழு உத்தரவிட்டது.

முன்மொழியப்பட்ட இரண்டு சட்ட வரைவுகளினதும் அறிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, 09 ஜூன் 2023 அன்று மீண்டும் பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடியது, இரண்டு வரைவுகள் தொடர்பாகவும் தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவுகளை உதாசீனம் செய்ததால், மீண்டும், இந்த இரண்டு முன்மொழியப்பட்ட வரைவுகள் தொடர்பாக தனித்தனி அறிக்கைகளை சமர்ப்பிக்க அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு குழுவின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல் இருப்பது, தெளிவாக,பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தை மீறுவதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் எமது பொறுப்புக்களையும் கடமைகளையும் எவ்வித இடையூறு இன்றியும், துன்புறுத்தல் இன்றியும் நிறைவேற்றுவதற்குத் தேவையான சுற்றுச்சூழலைப் பெற்றுக் கொடுப்பது சபாநாயகரின் பொறுப்பாகும்.

பாராளுமன்றத்தின் பாரபட்சமற்ற தன்மை, கௌரவம்,கண்ணியம் ஆகியவை கேள்விக்குட்படுத்தப்படாமலும், அவமதிக்கப்படாமலும் இருக்கும் வகையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவது  மிகவும் முக்கியம். 

அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை  தடுக்கும்,துன்புறுத்தும் மற்றும் அவமரியாதை செய்யும் நடவடிக்கைகள்  பாராளுமன்றத்தில் நடைபெறாமல் தடுப்பதும் சபாநாயகரின் பொறுப்பு.

எனவே இந்த விடயத்தை சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி விரைவில் அந்தக் குழுவைக் கூட்டி நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »