Our Feeds


Tuesday, October 10, 2023

Anonymous

MP, அமைச்சர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் இழந்தார் ஹாபிஸ் நஸீர் - பாராளுமன்ற செயலாளர் அறிவிப்பு

 



றிப்தி அலி

உயர் நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமதின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ஏ. ரோஹனதீர உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று (09) திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.


இக்கடித்திற்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளரொருவர் தமிழன் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

"இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானமொன்றினை மேற்கொண்ட பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குப்பட்டியலில் அடுத்ததாக உள்ள நபரின் பெயர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் அறிவிக்கப்படும்" என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமத் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (06) அறிவித்தது.

"வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த தீர்ப்பினால் அமைச்சர் நசீர் அஹமத், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்கின்றார்" எனத் தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.

இதனையடுத்தே நசீர் அஹமதின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »