Our Feeds


Thursday, October 12, 2023

Anonymous

பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதிக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை - CID அறிக்கை.

 



முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும்  அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும், அவரது திடீர் வெளிநாடுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID)  டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, ​​அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

குறித்த சம்பவத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஏதேனும் குழுக்களின் செல்வாக்கு இருக்கிறதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி சரவணராஜா  பதவியை இராஜினாமா செய்தது தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.  

நீதிபதி சரவணராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் எதையும் பதிவு செய்யவில்லை. மேலும் செப்டெம்பர் 23 ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தை நீதித்துறை சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததுடன் செப்டெம்பர் 24ஆம் திகதி அவர் வெளிநாட்டிற்கு சென்றார்.

அத்துடன் குறித்த நீதிபதி பிரதிவாதியாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்தது.

நீதிபதி சரவணராஜாவின் மனைவி, முல்லைத்தீவு மேலதிக நீதபதி டி. பிரதீபன், முல்லைத்தீவு சிரேஷ்ட அத்தியட்சகர் டி.யூ.பீ. அமரதுங்க, பொலிஸ் தலைமையக பதில் ஆய்வாளர் W.G.H.N.K. திலகரட்ன, நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி கான்ஸ்டபள் கே.எஸ். பிரேமன், தனிப்பட்ட பாதுகாப்பு  கான்ஸ்டபள் கே. சிவகாந்தன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் பொலிஸ் கான்ஸ்டபள் எம். முதிசன், முல்லைத்தீவு பொலிஸ் கொன்ஸ்டபள் ஆகியோர் சமரகோன் மற்றும் சந்தருவன், முல்லைத்தீவு நீதிமன்ற பதிவாளர் பீ. சரவணராஜா, நீதிபதியின் அலுவலக எழுத்தர் (Clerk) பீ. சுசிகன், பிஸ்கல் எஸ். சிவக்குமார் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தியோகத்தர் ஜே. லின்டன் ராஜா ஆகியோரிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இருப்பினும் நீதிபதி சரவணராஜா தனக்கு எதிராக அச்சுறுத்தல்கள் இருப்பதாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை எனத் தெரிவித்தனர்.

முல்லைத்தீவின் முன்னாள் மாவட்ட நீதிபதி சரவணராஜா 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் பாதுகாப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான பிரச்சினை எதுவும் எழுப்பப்படவில்லை. விசாரணையில், நீதிபதி செப்டம்பர் 24ஆம் திகதி டுபாய்க்கு சென்றது தெரியவந்துள்ளது.

அதற்காக குருநாகல் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடமிருந்து எயார் அரேபியா விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் செயல்படவில்லை என்றால் மீண்டும் அழைக்க பயணச்சீட்டு விற்பனை முகவருக்கு கென்ய தொலைபேசி  இலக்கம் ஒன்றும்  வழங்கப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு பயணச்சீட்டு பெறப்பட்டது. விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதிபதி விமான பயணச்சீட்டை பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களின் அடிப்படையில் நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகின்றது. சேவையிலிருந்து இராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யு.பி.அமரதுங்க, கடந்த ஜனவரி மாதம் முதல் தனிப்பட்ட முறையிலும்  உத்தியோகபூர்வமாகவும் நீதிபதியுடன் தான் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை இருப்பதாக அவர் தன்னிடம் ஒருபோதும் தெரிவித்ததில்லை எனவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் பரிசோதகர் திலகரத்ன வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கொன்ஸ்டபள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

மாவட்ட நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டெம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றப் பதிவாளரின் வாக்குமூலத்தில், தாம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வருவதாகவும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சரவணராஜா செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1 வரை வெளிநாட்டு விடுப்புக்கு விண்ணப்பித்ததாகவும் ,ஒகஸ்ட் 30 ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்ல விண்ணப்பம் அனுப்பியதாகவும், வெளிநாட்டு விடுமுறைக்கு ஒப்புதல் அளித்து நீதிச் சேவை ஆணைக்குழு செப்டம்பர் 21 ஆம் திகதி தொலைநகல் அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதியின் மனைவி, தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு குறைபாடு  குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். எனினும் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »