Our Feeds


Thursday, October 5, 2023

News Editor

அனைத்து ஊடகங்களும் கலந்துரையாட வேண்டும்


 சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா அல்லது நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா என்பது தொடர்பில் சமூக ஊடகங்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான ‘திவயின’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியரும் ஆசிரியர் பீடப் பணிப்பாளருமான எட்மண்ட் ரணசிங்கவை கௌரவிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

நாட்டின் ஊடகத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் படி ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நாட்டில் ஊடகத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்திய முன்னோடியாக, மூத்த ஊடகவியலாளர் எட்மண்ட் ரணசிங்கவை குறிப்பிடலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஏழு தசாப்த கால ஊடகப் பணியில் ஈடுபட்ட எட்மண்ட் ரணசிங்கவின் ஊடகத் துறை இலங்கையின் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஊடகக் கலையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்வதன் மூலம் பயனுள்ள ஊடகக் கலையை உருவாக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »