Our Feeds


Sunday, October 8, 2023

Anonymous

இலங்கை - அமெரிக்க முக்கிய பாதுகாப்பு பேச்சு: இரகசியத் தன்மையை பாதுகாக்க இருதரப்பும் தீர்மானம் - நடந்தது என்ன?

 



(லியோ நிரோஷ தர்ஷன்)


தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க அமெரிக்க பாதுகாப்பு உயரதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். 

எனினும் அந்த கலந்துரையாடல்களின் உள்ளடக்கத்தின் இரகசியத்தன்மை பாதுகாக்க இருதரப்பும் தீர்மானித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருந்ததுடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின்  பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த விஜயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 

எனினும் வாஷிங்டனில் பேசப்பட்ட விடயங்களின் இரகசியத்தன்மையை தொடர்ந்தும் பாதுகாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதே வேளை அமெரிக்காவிலிருந்து நேரடியாக ஜேர்மனுக்கு சென்ற பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்துடன் இணைந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தோ - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தும் வகையில்  தெற்காசிய தீவு நாடுகளுடனான தொடர்புகளை அமெரிக்கா வலுப்படுத்தி வருகின்றது. 

குறிப்பாக இலங்கையை மையப்படுத்தி  எம்.சி.சி உள்ளிட்ட பல திட்டங்களை அமெரிக்கா கவனத்தில் கொண்டிருந்தது.  எனினும் அந்த எந்தவொரு திட்டங்களும் பல்வேறு  காரணிகளின் அடிப்படையில் நிறைவுப்படுத்தப்பட வில்லை. ஆனால் இலங்கையுடன் பாதுகாப்பு துறை சார்ந்த விடயங்கள் குறித்து  அமெரிக்கா அண்மைய காலமாக கூடுதல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

அமெரிக்க மத்திய உளவுத்துறை (சி.ஐ.ஏ) தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் தலைமையிலான குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் உயரிய இரகசிய விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தனர்.  இந்த விஜயத்தின் போது அரச உயர் மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்புகளில் முக்கிய திட்டங்கள் முன்மொழியப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

அந்த தகவல்களின் பிரகாரம்,  பிரதானமானதாக அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை அமெரிக்க அரசின் உதவி திட்டமாக இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கும் யோசணை முன்வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 இவ்வாறானதொரு அதி நவீன தகவல் பரமாற்ற கட்டமைப்பை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டால், விமான நிலையத்தை பயன்படுத்தி இலங்கைக்குள் வரும் அல்லது வெளிச் செல்லும் எந்தவொரு நபர் குறித்த தகவல்களும் உடனுக்குடன் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனினால் பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்பட்டது.

அதே போன்று மேலும் இரு திட்டங்களுக்கான யோசனைகளையும் அமெரிக்க மத்திய உளவுத்துறையினர் முன் வைத்துள்ளனர். அதாவது, இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு கடல் வழியாக கொண்டுச் செல்லப்படுகின்ற  கேபிள் இணைப்புகளுக்கு பதிலாக புதிய இணைப்பு கட்டமைப்பு வழங்க முடியும் எனவும் அமெரிக்க மத்திய உளவுத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அதே போன்று நீர்மூழ்கி கப்பல்கள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்பை வழங்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் அனைத்துமே அமெரிக்க உதவி திட்டங்களாக இலங்கைக்கு வழங்க விரும்புவதாக அமெரிக்க மத்திய உளவுத்துறையின் பிரதிநிதிகள் இலங்கையிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகின்றது. எனவே இவ்வாறான தகவல்கள் ஊடாக பாதுகாப்பு துறைசார்ந்த உறவுகளில் அமெரிக்கா, இலங்கையுடன் நேரடி மூலோபாய தொடர்புகளை வைத்துக்கொள்ள விரும்புகின்றமையே வெளிப்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழலிலேயே  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, வாஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க தினைக்கள பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »