தற்போது நீதிமன்றத்தை தவிர்க்கும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தனது மதக் கோட்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பௌத்தம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதித்துள்ளார் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி சவீந்திர விக்கிரம மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரேஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த ரிட் மனு புதன்கிழமை (05) பரிசீலிக்கப்பட்டது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பொலிஸ் ஆணையாளர், இரகசியப் பொலிஸாருக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஜெரோம் பெர்னாண்டோ, போதகர் என்ற ரீதியில் பாரிய தவறை இழைத்துள்ளதாகவும், இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும், பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டு இதனை சமர்ப்பித்ததாகவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷவீந்திர விக்கிரம தெரிவித்தார்.