Our Feeds


Wednesday, October 18, 2023

Anonymous

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக பாரிய போராட்டம் வெடித்தது!

 



இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் போர்  தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்நிலையில், காசாவில் அஹ்கிலி அல் அராபியில் உள்ள வைத்தியசாலை மீது குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


குறித்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய விமானத்தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. அதேவேளை பாலஸ்தீனிய  ஜிகாத் அமைப்பின் ரொக்கட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காசாவில் வைத்தியசாலை மீதான குண்டு வீச்சு தாக்குதலை கண்டித்து லெபனான், ஜோர்தான் மற்றும் துருக்கி ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் போராட்டம் வெடித்துள்ளது.

லெபனானின் ஈரான் ஆதரவுடைய ஹெஸ்புல்லா அமைப்பு , அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இஸ்ரேல் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

ஹெஸ்புல்லாவின் அழைப்பைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பெய்ரூட்டுக்கு வெளியே, அவ்கார் புறநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே  கூடிய நிலையில் பாதுகாப்புப் படையினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு எதிர்ப்பாளர்கள் கற்களை எறிந்து அருகிலுள்ள கட்டிடத்திற்கு தீ வைத்துள்ளதாக ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பெய்ரூட்டில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் பிரதான நுழைவாயிலில் நூற்றுக்கணக்கானோர் கூடி, ஹெஸ்பொல்லாக் கொடிகளை உயர்த்தி கற்களை வீசியுள்ளனர்.

ஜோர்தான் தலைநகர் அம்மானில், போராட்டக்காரர்கள் இஸ்ரேலிய தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். ஹமாஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதன்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாயன்று அமெரிக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு தலைமை தாங்கி இஸ்ரேலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை அதிகாலையில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தூதரகங்களுக்கு வெளியே கூடினர். "பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் மரணம்" என்று ஈரான் தலைநகரில் உள்ள பிரான்ஸ் தூதரக வளாகத்தின் சுவர்களில் முட்டைகளை வீசி எதிர்ப்பாளர்கள் கூச்சலிட்டனர்.

லிபியாவில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்  பாலஸ்தீனியக் கொடிகளை காட்டிக்கொண்டும், சிலர் பாலஸ்தீனிய தலைபாகையால் (keffiyehs) முகத்தை மூடிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  அவர்கள் காஸா மக்களுக்கு ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.

மேலும், யேமனின் தென்மேற்கு நகரமான தாஸ், மொராக்கோ தலைநகர் ரபாத் மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத் ஆகிய இடங்களிலும் போராட்டங்களில் ஈடுப்படுவதை தொலைக்காட்சி காட்சிகள் காட்டியுள்ளன.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், காசாவில் வைத்தியசாலையில் நடந்த குண்டு வீச்சு தாக்குதல் மனித உயிர்கள் மீது அக்கறையற்ற தன்மையை அண்மைய இஸ்ரேலிய தாக்குதல்கள் எடுத்துக்காட்டுவதாக"  கூறினார். இந்நிலையில், அங்காராவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்திற்கு வெளியே ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »