Our Feeds


Sunday, October 1, 2023

SHAHNI RAMEES

சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான விசாரணை தேவை - சம்பந்தன்

 

ஆர்.ராம்

நீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சர்வதேசத்தின் பங்களிப்புடன் முறையான விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டால் நாட்டின் நல்லாட்சி, ஜனநாயகம் சீர்குலைந்து சர்வதேசத்தால் ஒதுக்கப்படும் நிலைமை உருவாகும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து செயற்பட வேண்டமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல், அழுத்தங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிபதியாக பணியாற்றிய  ரி.சரவணராஜா தான் வகித்த அனைத்துப் பதவிகளிலும் இருந்து இராஜினாமச் செய்து நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக, நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைகளுக்கு எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அரசாங்கம் இந்த விடயம் சம்பந்தமாக முறையான விசாரணையொன்றை சர்வதேசத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும். 

அதன்மூலமாகவே அரசாங்கம் தனது வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அவ்வாறு இல்லாது விட்டால் நாட்டின் அபிமானம் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு சர்வதேசத்தினால் ஒதுக்கப்படும் நிலைமையே உருவாகும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருநாட்டின் நல்லாட்சி, ஜனநாயகம் உள்ளிட்ட முன்னேற்றகரமான விடயங்கள் நீதித்துறையின் சுயாதீனத்திலேயே தங்கியுள்ளது என்பது அடிப்படையானதாகும். 

அவ்வாறான நிலையில் நீதித்துறையின் சுயாதீனத்தினை கேள்விக்குட்படுத்தும் வகையில், நீதிபதிகள், சட்டத்தரணிகளின் சுயாதீனமான செயற்பாடுகளில் தலையீடுகளைச் செய்வதும்,  தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுப்பதும் பாரதூரமான செயற்பாடுகளாகும். 

இலங்கையில் நீதித்துறையின் மீதான தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் சம்பந்தமான நிகழ்வுகள் தொடர்ச்சியான இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாட்டில் மக்கள் ஆட்சித் தத்துவத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அவை மீள நிகழாமையை உறுதி செய்வதோடு விடயங்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகின்றது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »