Our Feeds


Thursday, October 26, 2023

News Editor

வடக்கு மீனவர்களை காப்பாற்றுங்கள்


 வட மாகாண மீனவர்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள் என்று  ஐ.நா. வதிவிட பிரதிநிதியிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (25) புதன் கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வட மாகாண கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிக்கு ஊடகங்கள் வாயிலாக வடக்கு மீனவர் சமூகம் சார்பில் முன்வைக்கும் கோரிக்கை,

எங்களுடைய கடற்றொழில் அமைச்சர் கடந்த வாரம் உங்களை சந்தித்து இந்திய இழுவைப்படகுகளால் வடக்கு கடற்றொழில் சமூகம் பாதிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்த இந்திய மீனவர் பிரச்சினையில் ஐ.நா. தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என  மனு அளித்துள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால், வடக்கிலே அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள், தடைசெய்யப்பட்ட உள்ளுர் தொழில்முறைகள் என்பவற்றால் வடக்கு மாகாண கடல்வளம் அழிக்கப்பட்டு கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரமும் நாசமாக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு உள்ளுரில் தடைசெய்யப்பட்ட தொழில்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது, இவற்றை மூடிமறைக்கவே இந்திய மீனவர்களது பிரச்சினையை மட்டும் பூதாகரப்படுத்தி வருகின்றனர்.

நாங்கள் உங்களை சந்திக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். நீங்களும் எங்களை சந்திக்கும் நிலையும் இதுவரை இல்லை. ஆகவே ஊடகங்கள் வாயிலாக நாங்கள் உங்களிடம் இந்த விடயங்களை முன்வைக்கின்றோம்.

உள்ளுரிலே கடற்றொழிலாளர்கள் நாங்கள் நெருக்கப்பட்டு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இந்த கடற்றொழில் திணைக்களத்தினாலும் பணிப்பாளர் நாயகத்தினாலும் கடற்றொழில் அமைச்சினாலும் ஏறபடுத்தப்பட்டு வரும் நெருக்கதல்களில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்பதும் எங்களது கடலில் நாங்கள் சுதந்திரமாக மீன்பிடித்து ஆளுமையுடன் வாழ்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வகையில் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநி ஆகிய நீங்கள் கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்பதும்  வடக்கு மாகாண மீனவர்களாகிய எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

நீங்கள் வடக்கு மாகாணத்திற்கு வரும்போது கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை நேரில் சந்தித்து கேட்டறிந்து கொள்ளும் சந்தரப்பத்தை கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும் கட்றறொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதனையும் வடக்கு மாகாண மீனவர்கள் சார்பில் தயவாக கோரிநிற்கின்றோம் என்று தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »