Our Feeds


Thursday, October 19, 2023

SHAHNI RAMEES

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை...!

 

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

 

2018ஆண்டு ஆடி மாதம் 2ம் திகதி யாழப்;பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவைத் திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டாரெனவும் அக்கருத்தானது அரசியலமைப்பின் 06ஆவது பிரிவின் திருத்தம், 1978ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தண்டணைச் சட்டக்கோவை 120ஆம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றமாகும் என கொழும்பு குற்றப்புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதி நீதிம்ன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்தனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது சமர்ப்பணத்தில், விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியின் மக்கள் சேவைத் திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சியில் அரச அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வில் உரையாற்றுகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாகப் பெண்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள் குறித்து அவர் அச்சத்தையும் ஆத்திரத்தையும் உணர்ச்சி மேலிடக் குறிப்பிட்டுப் பேசினார்.

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற துஸ்பிரயோகங்கள் இடம்பெறவில்லை. அப்படி நடைபெற்றால் அதற்கான தண்டனைகள் பாரதூரமாக இருந்தன. நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கபட வேண்டுமாயின் அத்தகைய நிர்வாகம் ஒன்றினை தற்போது நாம் ஏற்படுத்த வேண்டும் என்று கருத்தியதாகவே அவரது கருத்து அமைந்திருந்ததேயன்றி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றவில்லை என்ற சமர்ப்பணத்தையடுத்து 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி விஜயகலா மகேஸ்வரனை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது .

இன்று (19) வழக்கு நீதிமன்றில் மேலதிக விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப்பிரிவுப் பொலிசார் நீதிமன்றில் தமது சமர்ப்பணத்தில் 1978ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவை  120ஆம் பிரிவின் கீழோ விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய உத்தேசிக்கவில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் தங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பொலிசார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்தனர்.

 

 இதயடுத்து விஜயகலா மகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா விஜயகலா மகேஸ்வரனை விடுதலை செய்யுமாறு நீதிமன்றினை கேட்டுக் கொண்டதை அடுத்து முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால்; விடுதலை செய்யப்பட்டார்.

 

சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் அனுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணி காமினி திசாநாயக்க ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா, ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகினர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »