Our Feeds


Sunday, October 29, 2023

Anonymous

அம்மிட்டிய தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

 



ஆர்.ராம்


அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

மங்களராமய அம்பிட்டிய சுமண தேரர் தமிழர்களை வெட்டுவேன் என்பதுள்ளிட்ட இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர் மீது நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதத்தினை அனுப்பியுள்ளதோடு, மனோகணேசன், வேலுகுமார் உள்ளிட்டவர்களும் தேரரைக் கைது செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம், மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜீவ்காந் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதோடு ஆதாரங்களையும் கையளித்து நடவடிக்கைகளை முன்னெடுக்கமாறு வலியுறுத்தியுள்ளார். தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.

இந்நிலையில், குறித்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், 

அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை அமுலாக்குவதற்கும், அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். 

ஆகவே, முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அந்த வகையில் வீணான சந்தேகங்களை வெளியிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »