Our Feeds


Tuesday, October 10, 2023

Anonymous

மீண்டும் இஸ்ரேல் மீது ஹமாஸ் உக்கிர தாக்குதல் | அஷ்கெலான் நகரை நோக்கி பாயும் ராக்கெட்டுகள். - என்ன நடக்கிறது?

 



இஸ்ரேலுக்கு விதித்த கெடு முடிவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. காசாவை ஒட்டியுள்ள அஷ்கெலான் என்ற நகரை நோக்கி ஹமாஸ் குழுவினர் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அதேநேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால், இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் குழுவினர் திடீரென சுமார் 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக காசாவுக்கு பிடித்துச் சென்றுவிட்டனர். இதனால் நிலைகுலைந்து போன இஸ்ரேல் உடனே சுதாரித்துக் கொண்டு, அடுத்த சில மணி நேரத்தில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டது.


அதுமுதற்கொண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் குழுவினர் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலுக்குள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயுதம் தாங்கிய நபர்களையும் முறியடிக்க இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், அதற்குப் பதிலடியாக, காசாவை ஒட்டி தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலான் நகரை மீண்டும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப் போவதாக ஹமாஸ் எச்சரித்தது. ஆகவே, அந்நகர மக்கள் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கெடு விதித்தது.


டெலிகிராமில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "காசா கரைக்கு வடக்கே அமைந்துள்ள இந்த நகரின் குடியிருப்பாளர்கள் மாலை 5 மணிக்குள் (இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 மணி) வெளியேற வேண்டும்" என்று எச்சரித்திருந்தது. அதேநேரத்தில், காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை விடுத்ததையும் ஹமாஸ் நினைவுகூர்ந்தது.


கெடு தாண்டியதும் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ்


அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே, ஹமாஸ் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிட்டது. காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும், இதனால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. கண்ணாடி சிதைவுகள் பட்டதால் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.


காசாவில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல்


அஷ்கெலான் நகர் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்கிறது. கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஜக்காரியா அபு மும்மர், ஜாவத் அபு ஷாமல் ஆகிய 2 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் ஹமாஸில் அதிகாரம் வாய்ந்த அரசியல் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர்.


இருதரப்பிலும் பலி 2,000ஐ நெருங்குகிறது


அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 870-ஆக உயர்ந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை முதல் குறைந்தது 1,008 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.


சமூக ஊடகங்களில் பதிவிட்ட இத்தூதரகம், 3,418க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது.


பாலத்தீனர்களுக்கு பாதையை மூடிய எகிப்து


இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக ரஃபா என்ற பாதையை எகிப்து மூடியுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் ரஃபா பாதை தான் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறும் ஒரே வழி. இப்பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காரணமாக எகிப்து தற்போது இந்தக் பாதையை மூடியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பாதை திறந்திருந்தாலும், அதனை கடந்து செல்ல நீண்ட காத்திருப்போர் பட்டில் இருக்கிறது. அந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே அந்த பாதையை கடந்து செல்ல முடியும். இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி ஓடும் பாலத்தீனர்கள் அங்கிருந்து வெளியேறும் ஒரே வழியும் அடைபட்டிருப்பதால் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.


நன்றி : BBC

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »