Our Feeds


Tuesday, October 10, 2023

SHAHNI RAMEES

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் - தம்மிக்க பெரேரா அறிவிப்பு


 பெரும்பான்மையான வாக்குகளை பெற முடியும்

என அரசியல் கட்சிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்குமாயின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.


நியூஸ் பர்ஸ்ட் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போது பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாக நியூஸ் பர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இது குறித்து அந்த ஊடகம் மேலும் தெரிவித்திருப்பதாவது,


'தம்மால் ஆரம்பிக்கப்பட்ட டி.பி கல்விச் செயற்திட்டத்தின் ஊடாக நாட்டிலுள்ள 55 இலட்சம் குடும்பங்களில் 11 இலட்சம் குடும்பங்களில் உள்ள 15 இலட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் 51 வீத வாக்குகளை பெற முடியும் என அரசியல் கட்சிகளிடம் இருந்து உத்தரவாதம் கிடைக்குமாயின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகவே இருக்கிறேன். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இதனை உறுதி செய்ய வேண்டும்' என அவர் குறிப்பிட்டதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.


இதன்போது இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த அவர்,


தம்மிக்க பெரேரா எமது கட்சியின் உறுப்பினராவார். அவரின் கருத்து தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம்.மேலும் அவர் கட்சியின் கொள்ளைக்கு அப்பால் சென்று தீர்மானம் எடுக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட காணப்படும் விருப்பத்தையே அவர் வெளியிட்டுள்ளார். 


நாட்டில் பெரும்பாலானவர்களின்  விருப்பமும் அதுவே. மேலும் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி அடிப்படையில் நாம் இதுவரையில் எந்தவொரு தீர்மானங்களையும் முன்னெடுக்கவில்லை.  சரியான நேரத்தில் நாட்டுக்கு பொருத்தமான தகுதியான ஒருவரை முன்னிறுத்துவோம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒருவராகவே அவர் இருப்பார்  எனத் தெரிவித்தார்.


பிரபல தொழிலதிபரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ தமது பதவியிலிருந்து விலகிய நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக பொதுஜனபெரமுனவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »