Our Feeds


Monday, October 2, 2023

SHAHNI RAMEES

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவேன் - எல்லே குணவங்ச தேரர்

 (இராஜதுரை ஹஷான்)


பொருளாதார பாதிப்பினை நடுத்தர மக்கள் மீது சுமத்தி விட்டு அரசியல்வாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை.மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து வீதிக்கு இறங்குவேன் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.


கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


பொருளாதார பாதிப்புக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் தற்போதைய பொருளாதார பாதிப்பின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் மனசாட்சியில்லாத வகையில் திணிக்கப்பட்டுள்ளது.பொருளாதார பாதிப்பினாலும் வாழ்க்கை சுமையினாலும் நடுத்தர குடும்பங்களின் சுகாதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.


பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. பொருளாதார பாதிப்பினால் நடுத்தர மக்கள் வாழ்வதா? அல்லது இறப்பதா ? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.


பொருளாதார நெருக்கடியின் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள் மாத்திரம் விடுமுறையை கழிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் நாட்டில் இருப்பதே இல்லை. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் அரசியல்வாதிகளுக்கான சலுகைகள் ஏதும் குறைக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாகவே வாழ்கிறார்கள்.



கடன் பெறுதல், மிகுதியாக உள்ள வளங்களை விற்பனை செய்தல்

ஆகியனவே அரசாங்கத்தின் பிரதான பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது.தேசிய வளங்களை பாதுகாப்பதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அரசாங்கத்துடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.


சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் தவணை கடன் வழங்கலை தாமதப்படுத்தியதை தொடர்ந்து மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.தற்போதைய மின் கட்டண அதிகரிப்பால் மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள். 


பலர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் அதை எவ்வாறு தாங்கிக் கொள்வார்கள். மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவேன்.அது அரசாங்கத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »