Our Feeds


Wednesday, October 18, 2023

Anonymous

அதிக நகர்ப்புற சனத்தொகை சதவீதத்தைக் கொண்ட மாவட்டம் கொழும்பு - ஆய்வில் தகவல்

 



இலங்கையின் நகர்ப்புற சனத்தொகை  44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகேவிடம் கையளிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டத்தின் பிரகாரம் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகரமயமாக்கல் ஒரு நாட்டின் அபிவிருத்தியை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். மேலும், நகரமயமாக்கல் நாட்டின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகும். இலங்கையில் நகரமயமாக்கல் தொடர்பாக கடந்த 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சனத்தொகை  மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பின்படி, நாட்டின் நகரமயமாக்கல் 18.2% ஆகும்.

ஒரு பகுதியின் நகரமயமாக்கல் பல அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது. சனத்தொகை , சனத்தொகை  அடர்த்தி, 10 கி.மீக்குள் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் துணிக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வங்கிகள், தனியார் பாடசாலைகள் மற்றும்  தனியார் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, கிராம சேவையாளர்களின் எல்லைக்குள் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை, வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வீடுகளின் சதவீதம், உள்ளூராட்சி சபை  அதிகார வரம்பில் விவசாயம் அல்லாத துறையில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பது போன்ற அளவுகோல்கள் உள்ளன.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் நோக்கம் இந்நாட்டில் உள்ளூராட்சி சபை எல்லைக்குள் அமைந்துள்ள நகர்ப்புறங்களை இனங்கண்டு அதற்கான பொருத்தமான அளவுகோல்களை முறையாகக் குறிப்பிடுவதாகும். இந்த கணக்கெடுப்புக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் ஒரு ஆலோசனைக் குழுவையும் அமைச்சரவை நியமித்தது.

இந்த கணக்கெடுப்பின்படி, கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஹோமாகம மற்றும் கொலன்னாவ ஆகிய இரண்டு உள்ளூராட்சி சபைகளும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளும் துரிதமாக நகரமயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே இங்கு மேலும் தெரிவித்தார். நாட்டின் ஏனைய மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களும் வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வு அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதற்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் அனைத்து மாவட்ட குழுக்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்தார்.

இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள 276 உள்ளூராட்சி சபைகளில் உள்ள 12,773 கிராம அலுவலர் பிரிவுகளில் 3,025  நகர்ப்புறங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது  23.68% ஆகும். இந்த கணக்கெடுப்பின்படி, அதிக நகர்ப்புற சனத்தொகை  சதவீதத்தைக் கொண்ட மாவட்டம் கொழும்பு ஆகும். இதன் சதவீதம் 96.74%. கம்பஹா மாவட்டம் 76.76% வீதத்தையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.28% வீதத்தையும் காட்டுகிறது. நகர்ப்புற சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2.84% ஆகும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) எம்.பி. ரணதுங்க மற்றும் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »