Our Feeds


Tuesday, October 17, 2023

Anonymous

ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதியளிக்க முடியாது - இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 



ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.


அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க சிறப்பு திருமண சட்டத்தினை ரத்து செய்தால் அது நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு இழுத்துச் செல்லும் என்றும், உச்ச நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது சட்டத்தை கையாள மட்டுமே முடியும். சிறப்புத் திருமண சட்டத்தை ரத்து செய்யவோ, அதற்குள் அர்த்தங்கள் கற்பிக்கவோ முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கில் தொடர்ந்து 10 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் அவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தனது தீர்ப்பில், "மொத்தம் நான்கு தீர்ப்புகள் உள்ளன. என்னிடம் ஒரு தீர்ப்பும், நீதிபதி கவுல், நீதிபதி பட், மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோரிடம் ஒவ்வொரு தீர்ப்பு உள்ளன.

நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கு சில உடன்பாடுகள், மாறுபாடுகள் உள்ளன. இந்த நீதிமன்றத்தால் சட்டத்தை இயற்ற முடியாது. அதனை விளக்க மட்டுமே முடியும். ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் நகர்ப்புறம் சார்ந்தது என்று கூறமுடியாது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது சட்டமே தவிர செயல்பாடுகள் அல்ல. திருமணம் என்ற எண்ணம் நிலையானது இல்லை அது மாற்றத்துக்கு உட்பட்டது.

சிறப்பு திருமண சட்டம் தவிர வேறு எந்தச் சட்டத்திலும் நீதிமன்றம் செல்லவில்லை. சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் அது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தால் மட்டுமே முடியும். சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தால் அது நம்மை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு கொண்டு செல்லும்" என்று கூறியுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »