Our Feeds


Monday, October 23, 2023

Anonymous

அனைவருக்கும் இலவச ஊடக கல்வி எனும் நன்நோக்கத்தில் உருவானது சிறகுகள் ஊடக வலையமைப்பு | கொழும்பில் பிரமாண்ட அறிமுக நிகழ்வு

 



அனைவருக்கும் இலவச ஊடக கல்வியை வழங்கும் நோக்கத்துடன், இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் சிறகுகள் ஊடக வலையமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு தமிழ் சங்கத்தில் இந்த நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் ரமேஷ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அத்துடன், நிகழ்வில் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துள்ள இளைஞர்கள், யுவதிகளை ஊக்குவித்து, இலங்கை ஊடகத்துறைக்குள் இளைஞர், யுவதிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் இந்த சிறகுகள் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறகுகள் ஊடக திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும், சிறகுகள் ஊடக நிறுவனத்தின் தலைவருமான ரகுநாதன் ரமேஷ்வரன், சிறகுகள் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை திறந்து வைத்தார்.

உதவும் கரங்கள் அமைப்பின் செயலாளர் எஸ். தயாளனும், இணையத்தள அங்குரார்பண நிகழ்வில் கலந்துக்கொண்டு, இணையத்தளத்தை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

WWW.SIRAGUGAL.LK என்ற இணைய முகவரி ஊடாக சிறகுகள் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, இணையத்தளத்தில் காணப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைப்பதன் ஊடாக, இலவச ஊடக கல்வியை தொடர்வதற்காக சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படும்.

முதல் கட்டமாக மூன்று மாத கால இலவச ஊடக கற்கையை மாணவர்களுக்கு வழங்கி, அதன் பின்னரான ஒரு மாத காலம் இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

இவ்வாறு முன்னணி ஊடக நிறுவனங்களில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில், திறமைகளின் அடிப்படையில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை அந்தந்த ஊடக நிறுவனங்கள் வழங்குவதற்கு முன்வந்துள்ளன.

இந்த நிகழ்வில் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் ரமேஷ்வரன், மலையக கலாசார ஒன்றியம் உள்ளிட்ட பலரால் கௌரவிக்கப்பட்டார்;.

இரத்தினபுரி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட உதவும் கரங்கள் அமைப்பு, இன்று இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக ஊடகத்துறைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பு, சிறகுகள் ஊடக திட்டத்தின் ஊடாக வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் ஒத்துழைப்புடன் இந்த ஊடக நிறுவனம் செயற்படுகின்றது.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் பெண்களின் ஆதரவுடனேயே இந்த ஊடக நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக நிறுவனம், ஊடக நிறுவனமாக மாத்திரம் செயற்படாமல், ஊடகத்துறைக்கு எதிர்கால சந்ததியை உருவாக்கித் தரும் தளமாகவும் செயற்படவுள்ளது. 

“சிறகுகள்” மூலம் அனைத்து மக்களும் முழுமையான பலனைப் பெறவும், “சிறகுகள்” குழுமத்தின் நோக்கம் வெற்றிபெறவும் ShortNews செய்திக் குழுமம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »