Our Feeds


Sunday, October 15, 2023

Anonymous

மைலத்தமடு, மாதவனையில் அத்துமீறி குடியமர்ந்துள்ளவர்களை வெளியேற்ற உத்தரவு - தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு

 



மட்டக்களப்பு மாவட்டம் மைலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளவர்களை வெளியேற்றுமாறும், அப்பகுதியில் புற்றரைகன் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை நிவர்த்தி செய்ய மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஒத்துழைப்பு வழங்குமாறும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். 


இவ்விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

நான் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தேன். அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலத்தமடு, மாதவனை பகுதியில் ஏற்பட்டுள்ள மேச்சல் தரைப் பிரச்சனை தொடர்பிலும், பண்ணையாளர்களின் தொடர் போராட்டம் , மற்றும் தற்போது வெளி மாவட்டத்தினர் உரிய மேச்சல்தரைப் பகுதிக்குள் அத்துமீறி உழவு செய்வதாகவும் பண்ணையாளர்களின் தற்போதைய நிலை தொடர்பிலும்  ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தேன்.

இவ்விடயம் தொடர்பில் அப்பகுதியின் தற்போதைய நிலமை தொடர்பில் எழுத்து மூலமான விபரத்தை ஜனாதிபதி என்னிடம் கேட்டிருந்தார். 

பின்னர் அது தொடர்பாக கலாநிதி ஜெயசிங்கம் அவர்கள் கடிதம் ஒன்றையும் எமக்கு வழங்கியிருந்தார். அதனை ஜனாதிபதியிடம் நான் வழங்கியிருந்தேன்.

இதன் பின்னர் இவ்விடயம் சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் அழைத்து ஒரு தீர்க்கமான முடிவை தருவதாக எனக்கு ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியிருந்தார். 

அதற்கிணங்க ஜனாதிபதி அவர்கள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட அமைப்புக்களோடு கலந்துரையாடியதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவரது செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (15.10.2023) நடைபெற்ற கூட்டத்தில், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று மைலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் குடியேறியுள்ள வெளிமாவட்டத்தினரை உடனடியாக வெளியேற்றுமாறும், இதற்கு இராணுவத்தினரதும், பொலிசாரினதும் ஒத்தழைப்பை பெற்றுக் கொள்ளுமாறும், அப்பகுதியில் குடியமர்ந்துள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணி இல்லை எனில் அவர்களுக்குரிய மாவட்டங்களிலேயே காணியைப் பெற்றுக் கொடுக்குமாறும், குறித்த பகுதியில் புற்றரைகள் பாதிக்கப்பட்டிருந்தால், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதற்கு உதவி செய்யுமாறும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக உரிய நிலப்பரப்பை மேச்சல்தரையாக பிரகடனப் படுத்துவதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »