Our Feeds


Monday, October 9, 2023

Anonymous

வெளிநாட்டுக்கு போய்வந்து ஒரு மாதத்தின் பின் நாட்டு வளங்களை விற்பனை செய்துவிட்டதாக சொல்கிறார்கள் - மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி

 



(எம்.வை.எம்.சியாம்)


ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் நாட்டை தாரைவார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை தடுக்க மக்களுடன் இணைந்து பணியாற்ற போவதாகவும் மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனு தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,


இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உள்ளூர் மீனவர்கள் எவ்வாறு வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவார்கள்?


இன்று முழு நாடுமே தாரைவார்க்கப்பட்டு விட்டதை போன்ற நிலையே உள்ளது. நிர்வாகிகள் வெளிநாடுகளுக்கு சென்று உடன்படிக்கைகளை செய்து வருகிறார்கள். 


வந்து ஒரு கிழமைக்கு பின்னரோ அல்லது ஒரு மாதத்திற்கு பின்னரோ  நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அடகு வைத்துள்ளதாகவும்  அறிய முடிகிறது. இந்த ஆட்சியாளர்கள் நாட்டு மக்களின் அவயங்களை கூட விற்றுள்ளனர்.


நாட்டில் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்  மனித - யானை மோதல் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் இந்த நிலைமை காணப்படவில்லை. இருப்பினும் இன்று சடுதியாக அதிகரித்துள்ளது. காரணம் அரசாங்கத்தில் உள்ளவர்கள் வனப்பகுதிகளில் உள்ள இடங்களை அபகரித்து அங்கு கட்டிடங்களையும், ஹோட்டல்களையும், நட்சத்திர விடுதிகளையும் அமைத்துள்ளனர். 


இதன் காரணமாக யானைகள் வனப்பகுதிகளை விட்டு வெளியேறுகிறது. அத்தோடு அவற்றினால் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மின்வேலிகளும் முறையாக நிர்மாணிக்கப்படவில்லை.


எனவே பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் மக்கள் முன்னிலையில் வந்து உரையாட முடியாது. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவர்களிடம் இல்லை  என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.


 அரசியல்வாதிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு முகங்களில், வெவ்வேறு கட்சிகளினுடாக வருகை தருவார்கள்.


அதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது. மக்களுடன் இணைந்து மோசமான ஆட்சியாளர்களிடத்திலிருந்து நாட்டை  மீட்பதற்கு நாம் தொடர்ந்தும் செயற்படுவோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »