Our Feeds


Monday, October 9, 2023

News Editor

அடுத்த வருட தேர்தலைகளையும் ஒத்திவைக்க அரசாங்கம் சூழ்ச்சிகளை செய்து வருகின்றது - சஜித்


 ஏற்கனவே தேர்தலை ஒத்திவைத்துள்ள அரசாங்கம் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலைகளையும் ஒத்திவைக்கத் தேவையான கூட்டுச் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்து வருகின்றது என்பது இரகசியமான விடயமல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

 

“தேர்தல் முறையை மாற்றியமைத்தல்” என்ற ஐசிங் கேக் துண்டை நீட்டுவதன் மூலம் அரசாங்கம் இதற்குத் தயாராகிறது. இது விஷம் கலந்த கேக் துண்டு என்றும், இவற்றுக்கு இந்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதையும் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டுகிறோம்.

 


மக்களின் இறையாண்மையுடன் விளையாடும் தற்போதைய அரசாங்கம், நடத்தப்பட வேண்டிய உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சட்டவிரோதமான முறையில் பிற்போடுவதன் மூலம் தனது தீர்க்கரமான தொடக்கத்தை ஆரம்பித்தது.

 


மக்கள் ஆணை இல்லாத ஆட்சியாளர்களுக்கு மக்களின் ஆசிர்வாதம் எந்த வகையிலும் கிடைக்கப்பெறாது.சந்தர்ப்பவாதமாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆட்சியாளர்கள், மக்களின் ஆணையையோ அல்லது விருப்பத்தையோ கருத்தில் கொள்ளாது, பல்வேறு அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தனது ஆளுகைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியின் முடிவு ஆபத்தானது என்பது முழு உலகமும் உணரக்கூடிய உண்மையாகும்.

 


இந்நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட அவலங்களுக்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்நாட்டை மீண்டும் இருண்ட கடந்த காலத்துக்கு கொண்டு செல்லவா தற்போதைய அரசாங்கம் தயாராகி வருகின்றது என நாம் கேள்வி எழுப்புகின்றோம். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், நடத்தப்பட வேண்டிய தேர்தலை ஒத்திவைப்பதும், நடத்தாமல் இருப்பதும் ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் மீதான கடுமையான தாக்குதல் என்பது இரகசியமான விடயமல்ல.

 


"தேர்தல் ஒத்திவைக்கப்படாது, ஒத்திவைக்கப்பட தேர்தலொன்று இல்லை" என மக்கள் இறைமையுள்ள பாராளுமன்றத்தில் வைத்து கேலிக்கையாகவும், ஏளனமாகவும், அவமதிக்கும் விதமாகவும் பேசிய ஜனாதிபதியைக் கொண்ட அரசாங்கத்திலிருந்து தேர்தலை எதிர்பார்ப்பது வெறும் கனவுதான் என்றாலும், இந்த ஒருதலைபட்ச செயல்முறைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தி கூற விரும்புகிறோம்.

 


ஜனநாயகத்தையும் மக்கள் இறையாண்மையையும் நசுக்க எடுக்கும் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும் என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »