Our Feeds


Sunday, October 22, 2023

SHAHNI RAMEES

போதைப்பொருளை ஒழிக்க தகவல் கொடுங்கள் ; இரகசியம் பேணப்படும்! - பொலிஸ்

 

பாலநாதன் சதீஸ்

போதைப்பொருளை ஒழிக்க தகவல்களை தாருங்கள்; இரகசியம் பேணப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தெரிவித்தார்.

கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக ஜனசபா அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (21) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஹெரத் இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் அவர் குறிப்பிடுகையில்,

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டு 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. 

நான் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு கடமைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. 

அதிகமாக கசிப்பு, போதைப்பொருளோடு தொடர்புடைய பிரதேசமாக புதுக்குடியிருப்பு, புதிய குடியிருப்பு கிராமமே இருக்கிறது.

தினந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வழக்கு தாக்கல்களை செய்து வருகின்றோம். அதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றன. 

பொலிஸ் என்ற அடிப்படையில் கசிப்பை நிறுத்துவதற்குரிய செயற்பாடுகள் எவை என்பது எங்களுக்கு தெரியும். பொதுச்சபையில் இவ்விடயத்தை பொதுமக்கள் கூறியமை எனக்கு சந்தோஷமாக இருக்கின்றது.

கிராமத்தில் இருக்கக்கூடிய அதிகமானோர் பொலிஸில் முறைப்பாடோ அல்லது தகவல்களோ வழங்குவதில்லை. இருப்பினும் அவ்வாறான இடங்களுக்கு எமது அதிகாரிகளை அனுப்பி, முடியுமான வரை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

சிலர் தகவல்களை வழங்கினாலும், அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டே சுற்றிவளைப்புக்களை மேற்கொள்கின்றோம். 

இந்த செயற்பாடுகளுக்கு எல்லாம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படுவது நீதிமன்றத்திலேயே. 

மனித உரிமைகள், சட்டங்கள், மக்களுடைய பாதுகாப்பு ஆகிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும். நீங்கள் தகவல்களை தாருங்கள். தற்போது கைது செய்யப்படுபவர்களை விட, இன்னும் அதிகமானோர் கைதாவார்கள். 

ஜனசபா செயற்குழுவினை உருவாக்கியதன் காரணமே இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கே ஆகும். 

ஆகவே, உங்கள் பிரச்சினைகளை எமக்கு அறியத்தாருங்கள். தகவல்கள் பாதுகாக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »