Our Feeds


Wednesday, October 25, 2023

SHAHNI RAMEES

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை மொபைலில் பதிவு செய்த விவகாரம் - ACJU மவ்லவிக்கு உதவிய சட்டத்தரணிக்கு 8 மாதம் தடை

 



ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை மொபைலில்

பதிவு செய்த விவகாரம் - ACJU மவ்லவிக்கு உதவிய சட்டத்தரணிக்கு 8 மாதம் தடை


தொழில் முறை தவறியதற்காக வழக்கறிஞர் ஒருவர் வழக்கறிஞராகப் பணியாற்றுவதை 8 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 


PCOI இன் நடைமுறை விதிகளுக்கு மாறாக, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (PCOI) நடவடிக்கைகளின் ஒரு பகுதியை கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி பதிவு செய்ய மௌலவிக்கு உதவியதற்காக நீதியரசர் புவனேக அலுவிஹாரே, எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், பிரதிவாதியான சட்டத்தரணி நிசாம் மொஹமட் ஷமீமை 8 மாதங்களுக்கு சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது. 


வழக்கறிஞரின் இடைநீக்கம் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘வழக்கறிஞர்களுக்கான நடத்தை மற்றும் ஆசாரம்’ தொடர்பான விதிகளை மீறும் வகையில் பிரதிவாதி செயல்பட்டாரா என்பதை பரிசீலிப்பதற்காக PCOI இன் தலைவர் இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தார். எவ்வாறாயினும், விசாரணையின் போது பிரதிவாதியான சட்டத்தரணி குற்றத்தை ஒப்புக்கொண்டார். 


2020 செப்டெம்பர் 9ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நடத்தப்பட்ட விசாரணைகளில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) சார்பாக பிரதிவாதியான சட்டத்தரணி தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.


மௌலவி முர்ஷித் முளப்பர் 9 செப்டம்பர் 2020 அன்று ACJU ஐ பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளராக PCOI இன் நடவடிக்கைகளில் கலந்து கொண்டிருந்தார். 


மௌலவி முர்ஷித் முளப்பரின் கைத்தொலைபேசியை வழக்கு நடைபெறும் இடத்திற்குக் கொண்டு சென்றதாகவும், PCOI யின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியைப் பதிவு செய்வதற்கு மௌலவி முர்ஷித் முளப்பருக்கு உதவியதாகவும் பிரதிவாதி சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 


கலபொட அத்தே ஞானசார தேரர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். கையடக்கத் தொலைபேசியை வளாகத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில், சட்டத்தரணியிடம் கையடக்கத் தொலைபேசியை வைத்துக்கொள்ளுமாறு மௌலவி முல்லாஃபர் கோரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. 


வழக்கறிஞர்கள் மட்டுமே தங்கள் மொபைல் தொலைபேசிகளை வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் வெளிநபரின் தொலைபேசியை எடுத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »