Our Feeds


Sunday, October 15, 2023

Anonymous

பலஸ்தீன் விவகாரம் | 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் (OIC) அவசர கூட்டத்திற்கு அழைத்தது சவுதி அரேபியா

 



கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் கூடுகிறது.

இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (Organisation of Islamic Cooperation) எனும் இந்த அமைப்பு, ஐ.நா. (UN) சபைக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர் நாடுகள் உள்ள ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்த கூட்டமைப்பில் மொத்தம் 57 நாடுகள் இணைந்துள்ளன.

இந்த அமைப்பு, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் குரலாக தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ளது. இக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது ஏற்றிருக்கும் சவுதி அரேபியா, அனைத்து உறுப்பினர் நாடுகளையும் இந்த சந்திப்பிற்காக சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜித்தாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த அமைப்பின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“தீவிரமடைந்து வரும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களையும் அதனால் அங்கு வசிக்கும் அப்பாவி காஸா மக்கள் படும் துன்பங்களை குறித்தும், அவர்களின் சீர்குலைந்து வரும் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்கவும் நமது அமைப்பின் செயற்குழு, உறுப்பினர் நாடுகளின் அமைச்சர் பொறுப்பில் உள்ள தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது”

நீண்ட காலத்திற்கு பிறகு சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் ஒரு சுமூக உறவுக்கான முயற்சிகளை சமீபத்தில்தான் மேற்கொண்டு வந்தது. ஆனால், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது போரை அறிவித்து காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்த தொடங்கியதும், அந்நாட்டுடன் அனைத்து பேச்சுவார்த்தையையும் நிறுத்தி வைத்திருக்கிறது சவுதி அரேபியா.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »