Our Feeds


Saturday, October 7, 2023

SHAHNI RAMEES

சிக்கிம் வெள்ளப் பெருக்கு | 53 பேர் பலி 140 பேரை காணவில்லை..!

 

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி 53 பேர் பலி: 140 பேரை காணவில்லை என்றும் மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.



வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.



வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிகாலை மேகவெடிப்பால் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது.



இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுங்தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்லி,பாக்யாங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. தீஸ்தா ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல பாலங்கள் இடிந்தது.



பர்டாங் என்ற இடத்தில் 23 ராணுவ வீரர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் வெள்ளத்தோடு வெள்ளமாக சென்றது. இதையடுத்து மீட்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. மாயமானவர்களை தேடும் பணி நடந்தது. இதில் பலர் சடலமாக மீட்கப்பட்டனர். கடந்த 3 நாட்களில் சிக்கிமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளம் தீஸ்தா ஆற்றில் இருந்து ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் வெள்ளத்தில் சிக்கி 53 பேர் இறந்துவிட்டதாக அம்மா நில அரசு தெரிவித்துள்ளது.



இன்னும் 140 -க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அம்மாநில முதல் - மந்திரி பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.



வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். லாச்சென் மற்றும் லாச்சுங் பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கி தவிக்கும் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகளை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் இந்திய விமான படையை சேர்ந்த ராணுவ ஹெலி காப்டர்கள் பயன்படுத்தபட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.



மங்கன் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் 5 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »