Our Feeds


Sunday, October 29, 2023

Anonymous

கேரளாவில் தொடர் வெடிப்பு : ஒருவர் உயிரிழப்பு – 29 பேர் படுகாயம்

 



இந்தியாவின் கொச்சி களமசேரியில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூடத்தில் திடீரென பயங்கர வெடி சப்தம் அடுத்தடுத்து கேட்டது. 6 முறை இந்த தொடர் வெடி சப்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர வெடி சப்தத்தால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். இந்த திடீர் வெடி விபத்தால் பயங்கர தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.


இந்த வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் 29 பேர் படுகாயங்களுடன் கொச்சி அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் கொச்சி பிரார்த்தனை கூட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.


இந்த வெடி விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. வெடிகுண்டுகள் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு காரணத்தால் வெடி விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த வெடி விபத்தை தொடர்ந்த்து அரசு மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வெடி விபத்து நிகழ்ந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; பொலிஸ் உயர் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.


இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், சுமார் 2000 பேர் பிரார்த்தனை கூட்டத்தில் கூடியிருந்தனர். அப்போது பயங்கர வெடி சப்தம் 3 முறை கேட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்தக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெண்களும் குழந்தைகளும் பங்கேற்றிருந்தனர் என்றார்.


இப்பிரார்த்தனை கூட்டத்தில் அகமலையைச் சேர்ந்தவர்களே பெருமளவு பங்கேற்றிருந்தனர். எர்ணாகுளம் மருத்துவமனை அருகே இந்த பிரார்த்தனை கூடம் அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதலே இங்கு பிரார்த்தனைக்காக பொதுமக்கள் கூடியிருந்தனர் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »