Our Feeds


Tuesday, October 10, 2023

News Editor

ஜனவரி – ஆகஸ்ட் வரை விமானத் துறைக்கு 22 பில்லியன் ரூபாய் இலாபம்


 சேவை வழங்கல் ஊடாக எமது நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அதில் சுமார் 10 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 200 விமானப் போக்குவரத்து சேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த திட்டத்தை திறைசேரிக்கு அனுப்பிய பின்னர், உலக வங்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான வெளிப்படைத்தன்மையை உருவாக்க சர்வதேச ஆலோசகர் ஒருவரின் உதவியை நாட பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறலாம்.

தற்போது எங்களிடம் எந்த விமானமும் இல்லை. அனைத்து விமானங்களும் குத்தகைக்கு எடுக்கப்பட்டவையாகும். ஏ330 விமானங்கள் இல்லாததால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்த முடியவில்லை. தற்போது குத்தகைக்கு எடுத்துள்ள அனைத்து விமானங்களும் ஏ320 விமானங்களாகும். அந்த விமானங்களைக் கொண்டு தூர இடங்களுக்கு சேவை மேற்கொள்ள முடியாது. எனவே, விமான நிறுவனத்தை மறுசீரமைப்பதன் மூலம் இதுபோன்ற பல சிக்கல்களைத் தீர்க்க முடியும்.

அண்மையில் விமானம் தாமதம் காரணமாக ஏற்பட்ட இழப்பு 06 பில்லியன் டொலர்கள். விமானங்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே தாமதம் ஏற்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஒரு விமானியால் விமானப் பொறியாளரின் சான்றிதழ் இல்லாமல் விமானத்தை செலுத்த முடியாது. குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்வதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஒரு விமானிக்கு 4 மில்லியன் ரூபாய் (40 லட்சம்) மாத சம்பளம் வழங்கப்படுகிறது. உலகில் உள்ள முன்னேற்றகரமான விமான நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கேட்கிறார்கள். ஆனால் தற்போதைய நிலைமையில் அது சாத்தியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »