Our Feeds


Sunday, October 22, 2023

Anonymous

பயங்கரவாத தடைச்சட்டம் : நிகழ்நிலை காப்பு சட்டத்தினால் நாட்டில் நிரந்தர அவசரகால நிலை உருவாகும் ஆபத்து : 125 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டாக எச்சரிக்கை

 



(நா. தனுஜா)


நாட்டின் ஜனநாயகத்துக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் தீவிர அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன சர்வாதிகாரப் போக்கிலான நிறைவேற்றதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற நிரந்தர 'அவசரகால நிலையைக்' கொண்ட நாடாக இலங்கை மாறுவதற்கு வழிவகுக்கும். எனவே இவ்விரு சட்டமூலங்களும் அரசாங்கத்தினால் உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டும் என 37 சிவில் சமூக அமைப்புக்களும், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் 125 பேரும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பல்வேறு விமர்சனங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கும் இவ்விரு சட்டங்கள் தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தி அம்பிகா சற்குணநாதன், தீபிகா உடகம், ராதிகா குமாரசுவாமி, ஜெஃப்ரி அழகரத்னம், சாலிய பீரிஸ், ஷ்ரீன் ஸரூர் உள்ளிட்ட சிவில் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் 125 பேரும், சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம், சட்ட மற்றும் சமூக நம்பிக்கை, சிறுபான்மையினரின் கூட்டிணைவு, விடுதலை இயக்கம், முஸ்லிம் பெண்களின் ஆய்வு மற்றும் செயற்பாட்டுப் பேரவை, கிராமிய அபிவிருத்தி நிலையம், பெண்களின் குரல் உள்ளிட்ட 37 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆகிய இரண்டும் அரசாங்கத்தினால் கடந்த 3ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்விரு சட்டமூலங்களும் மிகமோசமான சரத்துக்களை உள்ளடக்கியிருக்கின்றன. அவை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை மட்டுப்படுத்துவதுடன் அவற்றை மீறுகின்றன. அதுமாத்திரமன்றி அச்சட்டமூலங்கள் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கும் தீவிர அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ளன.

நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமானது குறித்தவொரு கருத்து 'பொய்யானது' என்றும், அது பகிரப்படுவதைத் தடுக்கவேண்டும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும், ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற மற்றும் அவரது சுயவிருப்பின்பேரில் பதவி நீக்கப்படுகின்ற ஆணையாளர்களை உள்ளடக்கியிருக்கும் நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான யோசனையை முன்வைக்கின்றது.

குறித்தவொரு கருத்தை நீக்குமாறும், இணையப்பக்கத்தை முடக்குமாறும் தனிநபருக்கோ அல்லது இணையசேவை வழங்குனருக்கோ அறிவுறுத்துகின்ற அதிகாரம் அந்த ஆணைக்குழுவுக்கு உண்டு. அந்த அறிவுறுத்தல்கள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கவோ அல்லது அவரிடமிருந்து தண்டப்பணம் அறவிடவோ முடியும்.

எனவே இச்சட்டமூலமானது இணைய ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தொழிற்துறைசார் கட்டமைப்புக்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கின்ற, அரசாங்கத்தின் கொள்கைகளையும், ஆட்சி நிர்வாகத்தையும் எதிர்க்கின்ற பிரஜைகள் உள்ளிட்ட சகல தரப்பினர் மீதும் அரச ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

இன்றளவிலே எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும் பொறுப்புக்கூறலின்மையும், ஆட்சியியல்சார் ஊழல் மோசடிகளும் ஆட்சியியலின் ஓர் நிரந்தர கூறாக மாறிவிடும். அதன்விளைவாக இலங்கை பிரஜைகளின் மீதும், அடுத்த சந்ததியினர் மீதும் ஏற்படக்கூடிய தாக்கங்களை மீளச்சீரமைப்பது என்பது மிகக் கடினமானதாகிவிடும். இவையனைத்தும் அரசினால் திணிக்கப்படுவதும், தீர்மானிக்கப்படுவதுமான 'உண்மையை' கொண்ட நாடாக இலங்கையை முழுவதுமாக மாற்றிவிடும்.

அதேபோன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, இதுவரையான காலமும் முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுவரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீளுருவாக்கமாகும். இச்சட்டமூலத்தில் 'பயங்கரவாதம்' எனும் பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகக் காணப்படுவதுடன் அதன்மூலம் அரசாங்கம் கருதும்பட்சத்தில் எந்தவொரு நடவடிக்கையும் 'பயங்கரவாத செயற்பாடாக' மாற்றப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எந்தவொரு ஆர்ப்பாட்டமும், வேலைநிறுத்தமும் கூட பயங்கரவாத செயற்பாடாகக் கொள்ளப்படக்கூடும்.

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரமானது பயங்கரவாதத்தை விதைப்பதாகக் கருதப்படக்கூடும். எந்தவொரு அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படக்கூடும். இவ்வாறான அடிப்படைகளில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுபவர்கள் தண்டிக்கப்படக்கூடும்.

தடுப்புக்காவல் உத்தரவுகள் நிறைவேற்றதிகாரத்தினால் (ஜனாதிபதியினால்) பிறப்பிக்கப்படுவதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் கூட உள்ளடங்கியிருக்காத கைதுசெய்யும் மற்றும் தடுத்துவைக்கும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலமானது சர்வாதிகாரப் போக்கிலான நிறைவேற்றதிகாரத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்ற நிரந்தர 'அவசரகால நிலையைக்' கொண்ட நாடாக இலங்கை மாறுவதற்கு வழிவகுக்கும்.

 இவ்விரு சட்டமூலங்களும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டுமக்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகள் சகித்துக்கொள்ளக்கூடியவை அல்ல என்றும், அதன்விளைவாக எதிர்ப்பு கிளம்பக்கூடும் என்றும் அரசாங்கம் அச்சமடைந்திருப்பதையே காண்பிக்கின்றன. மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நெருக்கடிகளுக்கு நாட்டுமக்கள் பொறுப்பல்ல.

அவ்வாறிருக்கையில் அந்நெருக்கடிக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நாட்டுமக்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய அவசியத்தைப் புறக்கணிக்கும் வகையிலான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் கடன்மறுசீரமைப்பை ஒரு சாட்டாகப் பயன்படுத்திவருகின்றது. கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி போன்றவற்றின் பெயரால் உருவாக்கப்பட்ட சட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை நாம் இன்னமும் எதிர்கொண்டுவருகின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் ஆகிய இரண்டையும் வாபஸ் பெறுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். புதிய சட்டங்களை உருவாக்கும்போது தகவல் அறியும் உரிமை சட்டவரைபு தயாரிப்பின்போது பின்பற்றப்பட்டதைப் போன்ற சகல தரப்பினருடனான கலந்துரையாடல் செயன்முறையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்று அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »