(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் 200 அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் சஹ்ரான் கைது செய்யப்படவில்லை.
முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை.
சர்வதேச விசாரணைகளை நடத்துவது அவசியமற்றது என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் வைராக்கியம் எமக்குள்ளது.அதே போல் குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மீதும் கடும் வைராக்கியம் உள்ளது.சிறுபான்மையினத்தவரின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்கல் இடம்பெறுவதற்கு முன் 2019.04.20 ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதி பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார்.
நியூசிலாந்து பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் மரணத்துக்கு பழி தீர்ப்பதற்காக கத்தோலிக்க தேவாலயங்களில் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதாகவும், முஸ்லிம்களை கொன்று,முஸ்லிம் குழந்தைகளை அநாதைகளாக்கி விட்டு, முஸ்லிம் பெண்களை விதவைகளாக்கி விட்டு இலங்கைக்கு வந்து விடுமுறையை கழிக்கும் வெளிநாட்டவர்களை கொல்வதற்காகவும் ஹோட்டல்களில் தாக்குதல் மேற்கொள்வதாகவும் சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் எவ்விடத்திலும் கோட்டபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர தாம் தமது உயிரை தியாகம் செய்வதாக குறிப்பிடவில்லை.மத மாரக்கத்துக்காகவே இஸ்லாம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற தெரிவு குழுக்கள் சமர்பித்த அறிக்கைகளில் எவ்விடத்திலும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படவில்லை.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் தற்போது எதிர்தரப்பினர் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலால் 5 அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்துள்ளார்கள்.ஆகவே அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் 33 அமெரிக்க நிபுணர்கள் நாட்டுக்கு வருகை தந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் உட்பட தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய லெப்டொப்,தொலைபேசி உட்பட முக்கிய ஆவணங்களை முழுமையாக பரிசீலனை செய்தார்கள்.
அதனை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்கள்.கோட்டபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதாக அமெரிக்க நிபுணர்கள் குறிப்பிடவில்லை.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ' உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு 2020.04.07 ஆம் திகதி அமெரிக்காவின் எப்.பி.ஐ. பிரிவிடம் வலியுறுத்துகிறார்.' இயலுமான அளவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வது அவசியமற்றது 'என எப்.பி.ஐ.பதிலளித்துள்ளது.
சஹ்ரான் தொடர்பில் புலனாய்வு பிரிவி நல்லாட்சி அரசாங்கத்துக்கு 200 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வு பிரிவின் பிரதானியாக பதவி வகித்த நிலந்த ஜயவர்தன சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சிடம் ' சஹ்ரான் என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை பிரசாரப்படுத்தி,முஸ்லிம் இளைஞர்களை அடிப்படைவாத கொள்கைக்குள் ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.அவரை கைது செய்ய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ' வலியுறுத்துகிறார்.2019.04.21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் இடம்பெறும் வரை சஹ்ரான் கைது செய்யப்படவில்லை.குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் அரச புலனாய்வு பிரிவு,புலனாய்வு பிரிவு ஆகிய முக்கிய தரப்பினரை பலவீனப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவிப்பது முறையற்றது. வெறுக்கத்தக்கது.
இதன்போது ஒழுங்கு பிரச்சனையை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 30 வருட கால யுத்தத்தை இல்லாதொழித்த புலனாய்வு பிரிவுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.எவரும் புலனாய்வு பிரிவை விமர்சிக்கவில்லை.ஆனால் புலனாய்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் நோக்கத்துக்காக மனித படுகொலையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய சரத் வீரசேகர முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே உங்களின் அரசாங்கம் (நல்லாட்சி அரசாங்கம்) குண்டுத்தாக்குதாக்குதலை நடுக்கவில்லை.தற்போது அப்பட்டமாக பொய்களை குறிப்பிடுகின்றீர்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளை கோட்டபய ராஜபக்ஷ இடமாற்றம் செய்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 7 மாதங்களுக்கு பின்னரே ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். வாஸ் குணவர்தன வழக்கில் பொய் சாட்சியம் வழங்கியதற்காகவே சானி அபேசேகர சி.ஐ.டி.யின் பிரதானி பதவியில் இருந்து பொலிஸ் ஆணைக்குழுவால் நீக்கப்பட்டார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நௌபர் மௌலானா பிரதான சூத்திரதாரி என்று நீங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டீர்கள்.அவ்வாறாயின் நௌபர் மௌலானாவை சி.ஐ.டி.விசாரணை செய்யவில்லையா? என்றார்.
இதற்கு பதிலளித்த சரத் வீரசேகர நௌபர் மௌலானாவை சி.ஐ.டி.யினர் விசாரணை செய்தார்கள் ஆனால் அந்த அறிக்கையை சி.ஐ.டி.யினர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய சரத் வீரசேகர 2019.02.18 ஆம் திகதி புலனாய்வு பிரிவினர் சஹ்ரானை கைது செய்ய கெகுனுகொல்ல பகுதிக்கு சென்றுள்ளார்கள்.அப்போது சஹ்ரான் தொடர்பான விசாரணைகளை நாங்கள் மேற்கொள்கிறோம் அவரை கைது செய்ய வேண்டாம் என சி.ஐ.டி.பிரிவினர் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பான முழு விபரம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் 145 ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போசிக்கப்பட்டார்கள்.முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு ஆதரவு வழங்கினார்கள்.சஹ்ரானின் தம்பியான ரிழ்வான் வைத்தியசாலையில் இருந்த போது அவரை சென்று பார்த்து நலன் விசாரித்தவர்களும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.
700 மில்லியன் ரூபா மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அன்ஷிப் அசாத் மௌலானா புகழிட கோரிக்கைக்காக புலம்பெயர் அமைப்புக்களின் நிதியுதவியுடன் செயற்படும் சனல் 4 வுக்கு வழங்கிய காணொளி பிரதான பேசுபொருளாக உள்ளது.நாடு என்ற ரீதியில் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் நாம் அதனை எதிர்க்க வேண்டும்,ஆனால் அரசியல் பொறாமை உள்ளதால் அந்த காணொளிக்கு சார்பாக ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவது பயனற்றது,எனெனில் இரண்டு சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தமது குறைகளை மறைத்துக் கொள்வதற்காகவே 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள் என்றார்.