இஸ்லாம் மதம் தொடர்பாக பிள்ளையான் சுட்டிக்காட்டிய விடயங்களை முற்றாக மறுப்பதுடன் சனல் 4 அலைவரிசையில் பிள்ளையான் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தொடர்பாக வெளிப்படுத்திய விடயங்களை விசாரணை மேற்கொள்ளாமல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நிராகரித்தமை தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகிறது. அதனாலே இது தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கிறோம் என தேசிய காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் முஸ்லிம்கள் தொடர்பாகவும் என்மீதும் இஸ்லாம் மதம் தொடர்பாகவும் சுட்டிக்காட்டிய விடயங்களை முற்றாக மறுக்கின்றேன். அதேபோன்று தொலைபேசி பதிவொன்றை வெளிப்படுத்தி, எனது அமைச்சுக்கு கீழே மைனிங் அனுமதி பத்திரம் வழங்கும் பொறுப்பு இருந்தாக குறிப்பிட்டிருந்தார். நான் பல வருட காலங்கள் அமைச்சு பதவிகளை வகித்து வந்திருக்கிறேன். ஆனால் எந்தவொரு காலத்திலும் (மைனிங்) சுரங்கத்துக்கான அனுமதி பத்திரம் வழங்கும் பொறுப்பு எனக்கு கீழ் இருந்ததில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், சாய்தமருதுக்கு தனியான பிரதேச சபையை கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியது சஹ்ரானுக்கு கொடுக்கும் இலஞ்சம் என இந்த சபையிலும் தெரிவிக்கப்பட்டதுடன் குற்றப் புலனாய்வு பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மிகவும் மோசமான அப்பட்டமான வதந்தியாகும்.
சஹ்ரானுக்கு நெருக்கமானவர்கள் சாய்ந்தமருதில் மறைந்திருந்த நிலையில், அவர்கள் 16 பேரும் கொலை செய்யப்படவும் அவர்களை காட்டிக்கொடுத்ததும் சாய்தமருது மக்களே தவிர குற்றப்புலனாய்வுப் பிரிவு அல்ல, அவ்வாறான மக்களை இந்த சபையில் மோசமான முறையில் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி சனல் 4 பல தகவல்களை வெளியிட்டிருக்கும் நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்தாமல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அதனை முற்றாக நிராகரிக்கிறார்.
சனல் 4 அலைவரிசையில் பிள்ளையான் தொடர்பாகவும் அவருடன் இருந்த அசாத் மெளலானா மற்றும் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக தெரிவிக்கும்போது அதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மறுக்கும்போது அது தொடர்பில் எமக்கு சந்தேகம் இருக்கிறது.
ஏனெனில், தாக்குதல் சம்பவத்தினால் நான் உட்பட பலர் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகினர். அதேபோன்று பேராயர் கர்தினால் உட்பட பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் இதன் உண்மையை கண்டறிய வேண்டும் என தெரிவிக்கும் போது எவ்வாறு எந்த விசாரணையும் இல்லாமல் சனல் 4 விடயங்களையும் மறுக்க முடியும் என்றார்.