Our Feeds


Friday, September 22, 2023

ShortNews Admin

VIDEO: விசாரணை நடத்துங்கள் - தூக்கு மேடைக்கு செல்லவும் தயார்!



இந்த தேசம் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் பிழைகள் எங்கு நடந்ததோ அங்கு கண்டித்து தண்டனை வழங்க வேண்டும். நான் தூக்குமேடைக்கும் செல்லத் தயார் - என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று (22) எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கமைய "உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு" தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


 

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமானால் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு புலனாய்வுப் பிரிவு அவசியம். ஆனால், இங்கு இருக்கின்ற எதிர்க்கட்சியினரும், ஏனையவர்களும், இவற்றையெல்லாம் குழப்பியடித்து அழிக்கும் நிலைமையை கொண்டுவந்துள்ளனர். என்னை முன்னாள் புலி உறுப்பினர் என்று கூறி என் வாயை அடைக்கின்றார்கள்.


 

நான் போராடியது, மஹிந்த ராஜபக்ஷ எங்களுக்கு உதவி செய்தது, சரத் பொன்சேகா எங்களுக்கு துப்பாக்கி கொடுத்தது, நிதி வழங்கியது, ஜே.வி.பி. நண்பர்கள் எமக்கு குண்டு, துப்பாக்கி தந்தது வெளிப்படையான உண்மை. அவற்றையெல்லாம் சொல்லி கடந்த கால அரசியல் நிலைமைகளுக்காக ஜனாதிபதி எடுத்த முடிவுகளை எல்லாம் ஓரங்கட்டி இப்போது நடக்கின்ற விடயங்களில் இருந்து நாங்கள் தப்பிவிட முடியாது என்பதை சொல்லிவைக்க விரும்புகிறேன்.


 

ஆகையால் இந்த தேசம் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் பிழைகள் எங்கு நடந்ததோ அங்கு கண்டித்து தண்டனை வழங்க வேண்டும். நான் தூக்குமேடைக்கும் செல்லத் தயார். நீங்கள் விசாரிக்க முடியும். அவற்றை கண்டுபிடியுங்கள். ஆக, உண்மைகளை மறைத்து போலியான விடயங்களை கொண்டுவந்து யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய தேவை கிடையாது.



முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவர் புத்திகூர்மையுடன் இருக்கவேண்டும். அவர் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கருத்துகளை சொல்லாமல் உண்மையான கருத்தை சொல்ல வேண்டும். 



இந்த பாராளுமன்றம் ஓர் உண்மையான மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மன்றமாக மாறுவதற்கு என்னால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவேன். ஆகவே, வரப்போகும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் - என்றார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »