(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்றும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிக்கும் விடயம் உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறானவர்களை இனம் காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சூத்திரதாரி யாராக இருந்தாலும் அவர் கண்டறியப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். எங்களால் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் இறைவனின் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஐ.எஸ். பயிற்சி பெற்றவர்கள் நாட்டில் இருப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் அன்று தெரிவித்தபோது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியதால் பாரியதொரு அழிவு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தற்போதும் நாட்டில் ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்திருக்கிறார்.
சந்திரகாந்தன் இந்த அரசாங்கத்தில் இருப்பவர். அப்படியானால் இது தொடர்பில் அவர் வெளிப்படுத்தி, அப்படியானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.