இந்து - பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
கார்னகி எண்டோவ்மென்ட் (Carnegie Endowment) மற்றும் சசகாவா மன்றம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்தியதோடு, சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் இன் கொள்கை ஆராய்ச்சி தொடர்பான சிரேஷ்ட உப தலைவர் டென் பெயரினால் (Dan Baer) இது நெறிப்படுத்தப்பட்டது.
மேலும், இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி நிற்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் தமது நாடுகளின் இறைமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளடக்கிய க்வொட் (Quad) நாடுகள் மற்றும், சீனாவின் இலக்குகளுடன் தொடர்பில்லாத இந்து சமுத்திரத்தின் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் தமது சொந்த முன்னுரிமைகளைக் கொண்டிருப்பதாகவும், அவற்றை மதிக்கத் தயாராக இருக்கும் எந்தவொரு தரப்பினருடனும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப இலங்கையும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சீனாவின் எழுச்சியானது APEC மற்றும் ASEAN போன்ற பிராந்திய கட்டமைப்பிற்குள்ளேயே நடந்ததாகவும், அதனை பல நாடுகள் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அண்மைக் காலமாக இந்தக் கட்டமைப்பிற்கு அப்பால் மாபெரும் வல்லரசுப் போட்டி விரிவடைந்து வருவதால் உறுப்பு நாடுகள் மத்தியில் கவலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.