சாய்ந்தமருது பிரதேசத்தில் அகோர கடலரிப்பு :
ஹரீஸ் எம்.பி கள நிலவரம் தொடர்பில் ஆராய விஜயம்.நூருல் ஹுதா உமர்
கடந்த சில வாரங்களாக அகோரமாக கடலரிப்பை சந்தித்துள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடலரிப்பில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்பிடி நடவடிக்கையும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுடனான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
அதிக மீன் உற்பத்தியை கொண்ட இந்த பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளை கள விஜயம் மேற்கொண்டு கேட்டறிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மேலதிக நடவடிக்கை எடுக்கும் வகையில் நகர திட்டமிடல், கரையோரம் பேணல், கரையோர பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோவை தொடர்பு கொண்டு விளக்கி அவசரமாக இந்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தினார்.
மீனவர்களின் குறைநிறைகளை பற்றிய விடயங்களை களத்தில் நின்ற மீனவர்களுடனும், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கரையோரம் பேணல் திணைக்கள பிராந்திய பொறியலாளருடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். இவ்விடயம் தொடர்பில் மேலதிக விடயங்கள் தொடர்பில் ஆராயும் உயரமட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை நடத்த ஏற்பாடுக்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கள விஜயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கரையோரம் பேணல் திணைக்கள சாய்ந்தமருது பிரதேச அதிகாரிகள், மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.