(எம்.ஆர்.எம்.வசீம்)
வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் இந்த மாதத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் மாதம் முடிவடைவதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கின்றன.
இதுவரை எந்த இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பாேனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெறப்போகும் புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றும் அது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் அலட்சியமாக இருந்தமையாலே இந்த சம்பவத்தை தடுக்க முடியாமல் போனதா என பலரும் கேட்கின்றனர். அது உண்மை. அன்று புலனாய்வு தகவல்களை உதாசீனம் செய்யாமல் நடவடிக்கை எடுத்திருந்தால் ஈஸ்டர் குண்டு தாக்குதலை தடுத்திருக்கலாம்.
அவ்வாறானதொரு அச்சுறுத்தலே 2020 மார்ச் 7ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ் நிதி அமைச்சராகவும் கோத்தாய ராஜபக்ஷ் ஜனாதிபதியாகவும் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியம் மத்திய வங்கிக்கு விடுத்திருந்தது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை பிழை. தனவந்தர்களுக்கு வரி விலக்களிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் பிழை. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாரிய நிதி நெருக்கடிக்கு ஆளாகி வங்குராேத்து நிலை அடையும் என இரகசிய கடிதம் ஒன்றை வழங்கி இருந்தது.
ஆனால் அந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் சிலர் நாணய நிதியத்தின் எச்சரிக்கை கடிதம் தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் வீராப்பு பேசி வந்தார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இல்லாமல் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்து வந்தார்கள். ஒரு இலட்சம் கிலாேமீட்டர் வீதி செப்பனிடும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும்போது, இதற்கு பணம் எவ்வாறு பெற்றுக்கொள்வது என கேட்டபோது போதுமானளவு பணம் இருப்பதாக பதிலளித்தார்கள். அதேபோன்று அன்றிருந்த மின்சார அமைச்சர், எரிபொருள் அமைச்சர்களும் இவ்வாறே பதில் சொன்னார்கள்.இறுதியில் நாடு பாதாலத்தில் விழும்வரைக்கும் அவர்களுக்கு தெரியாது.
அத்துடன் இந்த மாதம் மிகவும் தீர்மானம் மிக்கதாகும். வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் மாதம் முடிவடைவதற்கு இன்னும் 5நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்த இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பாேனால் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பட்டின் இரண்டாம் கட்டத்துக்கு செல்ல எங்களுக்கு முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது. அதனால் எமது நாடு இன்னும் பாதாலத்தில் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.