இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பெட்டிக்கலோ கெம்பஸ் நிறுவனம் தற்போது மீண்டும் சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த கால சில சம்பவங்கள் எனது நினைவுக்கு வருகின்றன.
மௌலவிமார்களாக பட்டம் பெற்று வெளியேறுபவர்களுக்கு பல்வேறு துறைகளில் உயர் கல்வியினை, தொழில் பயிற்சிகளை வழங்கக்கூடிய ஒரு உயர் கல்வி நிறுவனத்தினை அமைக்கும் திட்டத்தினை முதல் முதலில் 2012/13ம் ஆண்டளவில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா முன்வைத்தார்.
சமூகத்துக்கு அவசியமான ஒரு விடயம் என்பதனால் அத்திட்டம் மீதான ஆர்வம் எனக்கு அதிகமானது.
காத்தான்குடியில் ஒரு சந்திப்பில் அவரை கண்ட நான் 'இது பற்றி உங்களோடு விரிவாக பேச வேண்டும்' எனக் கூறி அவரிடம் நேரம் எடுத்து பின்னர் அவரை சந்தித்தேன்.
அந்த சந்திப்பு அப்போது அவர் வகித்த பிரதி அமைச்சு அலுவலகத்தில் கொழும்பில் நடைபெற்றது. மன்னாரை சேர்ந்த சகோதரர் நியாஸ் (தெ.கி.பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர்) அவர்களும் என்னோடு அச்சந்திப்பில் கலந்து கொண்டார்.
கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களாக இது பற்றி அவரோடு உரையாடினேன். இத்திட்டம் கொண்டிருக்கும் நன்நோக்கங்களின் அடிப்படையில், ஒரு பிரதேசத்துக்கு மாத்திரமன்றி முழு சமூகத்திற்கும், நாட்டுக்குமான உயர்ந்த சேவையை வழங்கக்கூடிய உயர் கல்வி நிறுவனமாக இதனை எவ்வாறு கட்டமைக்கலாம்... அதற்கான நிர்வாக கட்டமைப்புகள், முன்னாயத்தங்கள் எப்படி அமைய வேண்டும்? போன்ற விரிவான ஆலோசனைகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.
மேலும், உயர்கல்வி துறையில் எனக்கிருக்கும் நீண்ட அனுபவத்தையும் கொண்டு என்னால் முடிந்த சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக அவரிடம் உறுதியளித்து விட்டு வந்தேன்.
பின்னர் அது பற்றிய எந்த உரையாடல்களையும் அவர் என்னோடு மேற்கொள்ளவில்லை.
அதிலிருந்து சில வருடங்கள் கழித்தே ரிதிதென்னையில் அமைந்துள்ள இந்த Batti Campus நிறுவனம் உருவாக்கப்பட்டது.
கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலை தொடர்ந்து இந்த நிறுவனம் தொடர்பான சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் பல ஊடகங்கள் கிளப்பின. இனவாத அரசியல்வாதிகளும் பௌத்த மத குருமார்கள் சிலரும் அதில் முன் நின்றனர்.
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இந்த நிறுவனத்தினூடாக தீவிரவாத சிந்தனைகளுக்கு வித்திடுகிறார் என்ற அடிப்படையிலேயே அந்த குற்றச்சாட்டுகள் 'சோடிக்கப்பட்டு' முன்வைக்கப்பட்டன.
சமூக- அரசியல் விவகாரங்கள் தொடர்பில் சகோதரர் ஹிஸ்புல்லா அவர்களோடு பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதிலும், அவருக்கும் அந்த Batti Campus நிறுவனத்திற்கும் செய்யப்பட்ட பெரும் அநியாயமாகவே அந்த பிரச்சாரங்களை நான் பார்த்தேன்.
சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றவன் என்ற வகையில், அவ்வேளையில் அவர் மீது இழைக்கப்படும் அந்த அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கின்ற கடமை எனக்கும் உள்ளது என்றே சிந்தித்தேன்.
அவ்வாறான பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்த சிலரை நான் நேரில் சந்தித்தேன்; அதனை கண்டித்தேன். தீவிரவாத சிந்தனைகளுக்கும் அந்த நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினேன். அவ்வாறான பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுவதை நிறுத்துமாறு வேண்டினேன்.
சில நல்ல விளைவுகளையும் எனது முயற்சிகள் தந்தன.
அந்த சிக்கலான, சவால் நிறைந்த காலப்பகுதியில் அவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் எதிரான அநியாயமான பிரச்சாரங்கள் தொடர்பில் எனது சக்திக்கு உட்பட்ட வகையிலும் அவருக்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் என்னால் செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையாக அது இருந்தது.
பிற்பட்ட காலங்களில் நடந்த சில சந்திப்புகளின் போது ஹிஸ்புல்லாஹ் அவர்களிடம் இந்த விடயங்களை நான் பகிர்ந்து கொண்டும் உள்ளேன். அவரும் நன்றி தெரிவித்தார்.
போலியான காரணங்களை கூறி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்ற செய்தி கவலை தருகின்றன. மட்டுமின்றி, நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடிய ஒரு மாபெரிய சொத்து கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக பாழாக்கப்பட்டதும் கவலைக்குரிய விடயமாகும்.
இந்த நிறுவனமானது, வெளிநாட்டு தனவந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பல்லாயிரம் மில்லியன் பெறுமதியான நன்கொடை பணத்தைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
அந்த வகையில், இந்த நிறுவனமானது சமூகத்திற்கே உரித்தான சொத்தாகவே இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்; சமூகத்துக்கு நாட்டுக்கும் உயர்ந்த கல்வி சேவையை செய்ய வேண்டும் என்பதுவே எல்லோருமுடைய எதிர்பார்ப்பும் பிரார்த்தனைகளுமாகும்.
Eng.AbdurRahman