Our Feeds


Thursday, September 28, 2023

SHAHNI RAMEES

நுவரெலியா மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சிவரஞ்சனி விடுதலை...!

 

நுவரெலியா மாநகர சபையில் பொதுஜன பெரமுன சார்பில்  எதிர்கட்சி பெண் உறுப்பினராக செயல்பட்ட  முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவரஞ்சனி மீது நுவரெலியா  மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினராக இருந்தவர் எஸ்.சிவரஞ்சனி.

இவர் நுவரெலியா மாநகர சபைக்கு பொதுஜன பெரமுனவின் ஊடாக பெண் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவர் மாநகர சபை உறுப்பினராக பதவியில் இருந்த  கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி நுவரெலியா நகரில் தனது வீட்டுக்கு அருகில் செல்லும்  பிரதான வீதியில் உரிமையற்று கிடந்த 17 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்க பணத்தை கண்டெடுத்துள்ளார்.

இவ்வாறு கண்டெடுத்த அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அப்பணத்தை நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் சிறு குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரியிடம்   ஒப்படைத்துள்ளார்.

அதேநேரத்தில்  நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் குறித்த பணம் தன்னுடையது என்று உரிமைக்கோரி முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக அந்த நபர் பணத்தை தவறவிட்ட பிரதான வீதியில் உள்ள கடைகளில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளி படங்களை ஆதாரமாக பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

அதேநேரத்தில் தான் தவறவிட்ட தொகை 17 ஆயிரத்து 200 அல்ல 47 ஆயிரத்து 200 ரூபாய் என பொலிஸாரிடம் அந்த நபர் முறையிட்டுள்ளார்.

அதேநேரம் முறைப்பாட்டாளர் வழங்கிய சிசிடிவி காணொளியை மாத்திரம் ஆதாரமாக கொண்டு கண்டெடுத்த 17 ஆயிரத்து 200 ரூபாவை ஒப்படைக்க வந்த பெண் உறுப்பினரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து விசாரணையின் பின் முறைப்பாட்டாளர் தெரிவித்த 47ஆயிரத்து 200 ரூபாவை வழங்க வேண்டும் இல்லையேல் நீதி மன்றில்  வழக்கு தொடரப்படும் என உறுப்பினரிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மாநகர சபை பெண் உறுப்பினர் தான் கண்டெடுத்தது 17 ஆயிரத்து 200 ரூபாய் மாத்திரம் எனவும்,அப்பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவி கோரியே பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாகவும்  பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவரின் கூற்றை ஏற்க மறுத்த பொலிஸார் குறித்த பெண் உறுப்பினரை கைது செய்து இவர் மீது வழக்கை தொடர்ந்து 20.01.2019 அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.  அதே தினம் மாலை இவரை சரீரப்பினையில் செல்ல  உத்தரவிட்டு வழக்கு திகதியையும் நீதிமன்றம் அறிவித்தது.

அவ்வாறு வழக்கு விசாரணை அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து வழக்கு  விசாரணைகள் இடம்பெற்று நான்கு வருடங்களுக்கு பின் கடந்த 18.09.2023 அன்று இவ்வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பினை  நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி நாலக்க சஞ்சீவ வீரசிங்க வழங்கினார்.

இதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவரஞ்சனி குற்றமற்றவர் எனவும் அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றங்கள் அனைத்திலும் இருந்தும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கிய நீதவான் இவரை விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »