ஹட்டன் குயில்வத்தை பகுதியில் புதிய மதுபானசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மலையக மக்கள் முன்னணியின் மகளீர் அணி பிரதி தலைவியும் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான சுவர்ணலதா இலங்கேஸ்வரன் தலைமையில் இப்போராட்டம் நேற்று (16) மாலை குயில் வத்தை நகரில் இடம்பெற்றது.
இதன்போது ஹட்டன் குயில்வத்தை பகுதியில் மதுபானசாலை ஒன்றை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த மதுபானசாலைக்கு எதிர்ப்பை தெரிவித்து தாம் வீதிக்கு இறங்கியுள்ளதாகவும், மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஸ்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் புதிய மதுபானசாலை அமைக்கப்படவுள்ள பகுதியில் பாடசாலை, ஆலயம் காணப்படுவதுடன், அதிகமாக பொதுமக்கள் நடமாடும் இடம் என்பதால் குறித்த பகுதியில் மதுபானசாலையை அமைத்தால் பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடுவதுடன் சமூக சீர்கேட்டுக்கும் வழியமைக்கும் எனவே இப்பகுதியில் மதுபானசாலையை அமைக்க விடமாட்டோம் எனவும் இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் இப்பகுதியில் இடம்பெறுமென மலையக மக்கள் முன்னணியின் மகளீர் அணி பிரதி தலைவியும் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான சுவர்ணலதா இலங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆ.ரமேஸ்