களுத்துறை, சேறுபிட பிரதேசத்தில் நேற்று (08) இரவு நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை - தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை சேறுபிட கொழும்பகே வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று மாலை மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பாததால், தேடி பார்த்த போது அயல் வீடொன்றுக்கு முன்பாக வெட்டுக்காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.
பின்னர் குடும்பத்தார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை மறுநாள் மீண்டும் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.