Our Feeds


Sunday, September 3, 2023

SHAHNI RAMEES

இந்திய இராணுவம் இலங்கை வந்தால் மீண்டும் திரும்பிச்செல்லாது - காரணத்தை கூறுகிறார் விக்கினேஸ்வரன்

 

இலங்கையில் கலவரமொன்று மூண்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது.

ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டுசக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்துகொண்டால் இந்திய இராணுவம் திரும்பிச்செல்ல விரும்பாது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் இனக்கலவரமொன்று வந்தால் அதனைத் தடுப்பதற்கு இந்திய இராணுவம் வரும் என்றும், அவ்வாறு வந்தால் அந்த இராணுவம் நாட்டிலிருந்து மீண்டும் திரும்பிச்செல்லாது என்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விளக்கம் கோரியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் தொலைக்காட்சி நிலையமொன்றினால்,

'இலங்கையில் 1983 இல் தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்ட இனக்கலவரத்தைப்போன்ற கலவரமொன்று மீண்டும் ஏற்படுமா?' என்று வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே தான் இவ்வாறு கூறியதாக விக்கினேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

மேலும் '1983 இல் நாட்டில் இடம்பெற்றதைப்போன்ற கலவரம் மீண்டும் உருவாகும் சாத்தியமில்லை. ஏனெனில் அப்போது நிலவிய சூழலுக்கும், தற்போதைய சூழலுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. 'போன்ற என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்' என்று மாமனார் (முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன) கூறியதைப்போன்று இப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கூறமுடியாது' தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் கலவரமொன்று உருவானால், அது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் வெளிநாட்டு உள்ளீடுகளின் செயற்பாடுகள் நாட்டில் தீவிரமடையும் பட்சத்தில் கலவரமொன்று (அமைதியின்மை) உருவாகக்கூடும் என்றும், அப்போது இந்தியாவின் உதவியை நாடவேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்படும் என்றும் குறிப்பிட்ட விக்கினேஸ்வரன், 'எனவே இலங்கையின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தால் அவர்கள் மீண்டும் திரும்பிச்செல்லமாட்டார்கள். ஏனெனில் இலங்கையில் பிற வெளிநாட்டு உள்ளீடுகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்திருப்பதை அறிந்துகொண்டால், அவர்கள் திரும்பிச்செல்ல விரும்பமாட்டார்கள். அதனை ரணில் விக்ரமசிங்கவும் நன்கறிந்திருக்கிறார்' என்று தெரிவித்தார்.

இங்கு வெளிநாட்டு உள்ளீடுகள் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியபோது, 'சீனாவைக் குறிப்பிடலாம். வேறு எந்தெந்த நாடுகள் அவ்வாறு செயற்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை' என அவர் பதிலளித்தார். அதனைத்தொடர்ந்து இலங்கையில் கலவரத்தைத் தோற்றுவிக்கும் வகையில் சீனா செயற்படுகின்றதா என்று வினயபோது, அதற்குப் பதிலளித்த விக்கினேஸ்வரன் பின்வருமாறு குறிப்பிட்டார். 

'இங்கு கலவரம் என்பது நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்தல், பதவியில் உள்ள ஆட்சியாளர்களுக்குப் பதிலாகத் தமக்கு வேண்டியவர்களை ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டுவரல் போன்றவையாகவும் அமையலாம். நாட்டின் தென்பகுதியான அம்பாந்தோட்டையில் சுமார் 15 ஏக்கர் நிலம் சீனாவுக்கு சொந்தமாக இருக்கின்றது. அதேபோன்று தலைநகர் கொழும்பில் துறைமுகநகரம் சீனாவின் வசமிருக்கின்றது. எனவே மேற்குறிப்பிட்ட விடயங்கள் சாத்தியமாகலாம். ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அச்சம்பவங்களை ஆதாரமாகக்கொண்டே நான் இதனைக் கூறுகின்றேன்' என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »