Our Feeds


Wednesday, September 27, 2023

News Editor

சிங்கப்பூரை போன்ற அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்


 இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நீதிமன்றங்களுக்குள் நீண்டகாலமாக வழக்கு விசாரணைகள் நீடிப்பது நெருக்கடியாக அமைந்துள்ளதாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மாற்று வழிகளை கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (26) நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மத்தியஸ்தானத்தினால் (IADRC) இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் திறந்த பொருளாதார கொள்கையை அமுல்படுத்துவதற்கு பிரச்சினைகளை தீர்ப்பதில் காணப்படும் சாதக நிலைமை முக்கிய பங்கு வகிப்பதாகவும், கொழும்பு துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த சட்டத்தின் ஊடாக முதலீட்டுச் சபையை, பிரச்சினைகளுக்கு செயல்திறனுடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய பொருளாதார ஆணைக்குழுவாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் மற்றும் மாற்று பிரச்சினைகளை தீர்பதற்கான மத்தியஸ்தானமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கான அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் போட்டித்தன்மை மிக்க எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் சென்று செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புளொக்செயின், பசுமை வலுசக்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் துறையில் சிறப்பம்சங்களை உருவாக்க ஒன்றுபடுமாறு சட்ட வல்லுநர்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக உறுதிப்படுத்த வேண்டும். சிங்கப்பூரை போன்ற அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். அதன்போது சிங்கப்பூருக்கு நிகராக எமது செலவீனங்கள் குறைவடைய வேண்டும். அதனால் சிங்கப்பூருடன் போட்டியிடும் இயலுமையும் எமக்கு கிட்டும். அந்த இடைவெளியை குறைத்துக்கொள்ள வேண்டுமெனில் எமது பயணத்தை துரிதப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, நாட்டின் சட்டத்தரணிகளும் ஏனைய நீதித்துறை சார்ந்தவர்களும் மாற்றுச் செயற்பாடுகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும். இலங்கை உங்களுக்கான சந்தையல்ல, இலங்கைக்கு வெளியிலேயே உங்களுக்கான மிகப்பெரிய சந்தை வாயப்பு உள்ளது. இந்த துறை மாத்திரமின்றி புதிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, நாம் பாரிய அர்பணிப்புக்களை செய்து வருகிறோம். பசுமை ஹைட்டிரிஜன், பச்சை அமோனியா மற்றும் காற்றின் மூலம் 60 கிகாவோட் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். சிலர் 40 கிகாவோட்களை உற்பத்திச் செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர்.

அது தொடர்பிலான வர்த்த வாய்ப்புகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தோடு அனைத்து புதிய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மேற்படி துறைகளில் கல்வி,நிபுணத்துவ தெரிவுகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் மேம்படுத்தல்களுக்கு அவசியமான தேவைப்பாடுகளை பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளோம். இலங்கையை செயல்திறன் மிக்க தூரநோக்குடன் கூடிய சட்ட சூழலை கொண்ட நாடாக மாற்றியமைப்பதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.” என ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »