Our Feeds


Monday, September 18, 2023

News Editor

புதிய மாற்றம் ஒன்றை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியாக ஒன்றிணைய வேண்டும்


 நாட்டு மக்களை பிரித்து, வேறுப்படுத்தி விட்டு அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். எமக்குள் கலாசார வேறுபாடுகளே காணப்படுகின்றதன்றியே அரசியல் வேறுபாடுகள் இருப்பதில்லை. இனிமேலும் நாம் பிளவுப்பட்டு பிரிந்து இருப்பதில் எந்த பயனும் கிடையாது.  புதிய மாற்றம் ஒன்றை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியாக  ஒன்றிணைய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, மூதூர் பகுதியில் சனிக்கிழமை (16) பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வைத்தியசாலைகளில் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நோயாளர்களுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்படுகிறது.கண்களுக்கு மருந்து எடுக்க வரும் நோயாளி  கண் பார்வையற்று குருடாக வீட்டுக்கு செல்கிறார்கள். தடுப்பூசி ஏற்றப்படும் நோயாளர் மரணக்கிறார். இவற்றை மாற்ற வேண்டும். இந்தப் பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல. இதற்கு முன்னரும் அவ்வாறே இருந்தது.

எமது பிள்ளைகளுக்கு முறையான கல்வி இல்லை. கல்வி கற்பதற்கான வசதிகள் இல்லை. படித்தால் வேலைவாய்ப்பு இல்லை. நாட்டில் உள்ள இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது. எனவே இதனை மாற்ற வேண்டும் அல்லவா? எமது நாடு உலக நாடுகளிடமிருந்து கடன்களை பெற்று பிச்சைக்கார நாடாக மாறியுள்ளது.

பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்த முடியாத வங்குரோத்து நாடாக உலக நாடுகளால் அடையாளப்படுத்தப்பட்டது. இந்த நிலைமைக்கு நாட்டை கொண்டு வந்தவர்களை விரட்ட வேண்டும். நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட்டவர்களை விரட்ட வேண்டும். திருடர்களை ஆட்சி அதிகாரங்களிலிருந்து துரத்த வேண்டும்.

ஆட்சியாளர்கள் திருடுவார்கள்.ஆனால் நாட்டு மக்கள் இனத்தை பாதுகாத்து கொள்ள அவர்களுக்கு வாக்களிப்பார்கள்.  திரும்பவும் அவர்கள் பொருளாதாரத்ததை சீரழிப்பார்கள். மக்கள் மீண்டும் இனத்தை பாதுகாக்க அவர்களுக்கு வாக்களிப்பார்கள்.மீளவும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு நாட்டை மாற்றுவர்கள்.

இருப்பினும் நாட்டு மக்கள் இனத்தை பாதுகாக்க வாக்களிப்பார்கள் இவ்வாறான ஒரு அரசியல் கலாசாரமே நாட்டில் உள்ளது. இதனை நாம் மாற்ற வேண்டும்.நாம் ஒன்றாகவே வாழ்கிறோம். ஆனால் நாட்டு மக்களை பிரித்து வேறுப்படுத்தி அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

எமக்குள் கலாசார வேறுபாடுகளே காணப்படுகிறதன்றியே அரசியல் வேறுபாடுகள் காணப்படுவதில்லை. நாடு இன்று சுயாதீனத்தை இழந்துள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகள். நாட்டின் எமக்கு சொந்தமான வளங்கள் எம்மை விட்டு செல்கின்றன. இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனவே நாம் ஒன்றுபட வேண்டும்.கடந்த 75 வருடங்களாக நாட்டு மக்களை பிரித்து ஆட்சி செய்கிறார்கள். எனவே இதற்கு பிறகும் பிரிந்து செயற்பட கூடாது. அனைத்து மக்களும் தமது மத விடயங்களை சுதந்திரமாக மேற்கொள்ள கூடிய நாட்டை உருவாக்க வேண்டும். இனிமேல் நாம் பிளவுப்பட்டு பிரிந்து இருப்பதில் எந்த பயனும் கிடையாது. நாட்டில் புதிய மாற்றம் ஒன்றை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அதற்கு தலைமை வழங்க தேசிய மக்கள் தயாராக உள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »