மக்கள் எழுச்சியை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததில் இருந்து கடுமையான மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்றைய தினம் தனது அரசியல் நுழைவை உறுதிப்படுத்திய அவரின் நெருங்கிய நண்பரும் தெரன ஊடக வலையமைப்பின் உரிமையாளருமான திலித் ஜயவீரவின் தலைமையிலான புதிய அரசியல் கட்சி மூலம் தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்றி வலுப்படுத்த முனைந்துள்ளார்.
இந்நாட்டுப் பிரஜைகளால் பதவியில் இருந்து விரட்டப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகள் மற்றும் வசதிகளையும் அனுபவித்துவரும் கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் தனது நெருங்கிய நண்பரான திலித் ஜயவீரவினால் தலைமை ஏற்கப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக டெய்லி மிரர் அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம், ஜயவீர தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் மவ்பீம ஜனதா கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு கட்சிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியும் தற்போது படித்த புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதுடன் அது ராஜபக்சவின் ஆதாரத்திற்கான அடித்தளம் போன்ற ஒரு முயற்சியாக அறியப்படுகிறது.
பொதுமக்களிடம் தற்போது இருக்கின்ற தன்னைப் பற்றிய எண்ணத்தை மாற்ற கோட்டா கையாண்ட புதிய முயற்சியாக, ஊடகத்துறை நண்பரும் தொழிலதிபருமான திலித் ஜயவீரவினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று , “கம சமக பிலிசந்தர“ எனும் திட்டத்தின் கீழ் கோட்டா ஜனாதிபதியாக இருந்தபோது சென்ற கிராமங்களுக்கு மீண்டும் சென்று, முன்னாள் ஜனாதிபதி பற்றி மக்களிடையே இருக்கும் விம்பத்தை மாற்றியமைக்க முயல்வதாக தெரிய வருகிறது.
குறித்த கிராமங்களில் வசிப்பவர்களிடம் கோட்டாபய ராஜபக்ச தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவைப் பற்றிய மக்களின் மனநிலை என்ன, அவர் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? என்பதை அறிய கருத்துக்கணிப்பும் குறித்த பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
தற்போது அவரின் புதிய முயற்சியாக, அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு ஆயத்தமாகி வரும் நிலையில், திலித் ஜயவீரவினால் தலைமை ஏற்கப்பட்டுள்ள மவ்பீம ஜனதா கட்சிக்கு தனது பூரண ஆதரவை கோட்டா வழங்கவுள்ளதாக தெரிய வருகிறது.
மவ்பீம ஜனதா கட்சி மற்றும் அதன் தலைவரான தெரன ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜெயவீரவின் அமைப்பான “அரமுண”வும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மவ்பீம ஜனதா கட்சி எனும் ரீதியில் இணைந்து போட்டியிட கைகோர்த்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவாரான ஹேமகுமார நாணயக்கார டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.