Our Feeds


Sunday, September 3, 2023

SHAHNI RAMEES

நீதித்துறை சுயாதீனத்தின் மீதான அச்சுறுத்தல் தீவிரமடைகிறது : உபுல், ஜயம்பதி, சாலிய எச்சரிக்கை

 

ஆர்.ராம்

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறையான பாராளுமன்றம் ஆகியன நீதித்துறையை அதிகாரமில்லாத கட்டமைப்பாக வெளிப்படுத்தி, அதன் சுயாதீனத் தன்மை மீதான அச்சுறுத்தலை தீவிரப்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய, ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் சம்பந்தமாக அவர்கள் வீரகேசரிக்கு வாரவெளியீட்டுக்கு தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு :

உபுல் ஜயசூரிய

ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவிக்கையில், இந்த நாட்டில் சட்டவாக்கத்துறைக்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத்துறைக்கோ காணப்படாத சிறப்பு விடயமாக இருப்பது நீதித்துறையின் சுயாதீனத் தன்மையாகும்.

அந்நிலையில், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை அண்மைக்காலமாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு சில நிகழ்வுகளை உதாரணமாக காட்ட முடியும்.

குறிப்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது, அது அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது அதிசிறந்த தீர்ப்பு என்று கூறி தீர்ப்பு வழங்கிய மேல்நீதிமன்றின் தலைமை நீதிபதி புகழப்பட்டார்.

பின்னர் அதே நீதிபதி தலைமையிலான குழுவினர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் ஜனநாயக உரிமைகளை மறுதலிக்கக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியபோது மோசமான தீர்ப்பு வழங்கிய நீதிபதியாக விமர்சிக்கப்பட்டார்.

இதற்கு அடிப்படையில் காரணமாக இருப்பது நிறைவேற்று அதிகாரத்துறையின் விருப்பத்துக்கு இசைவான தீர்ப்பு அளிக்கப்படாமையே ஆகும். இதுபோல, நீதிபதிகளின் தீர்ப்புக்கள் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை என்ற பெயரில் சட்டவாக்கத்துறையில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலைமையானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இத்தகைய நிலையில், சட்டவாக்கத்துறையின் தலைவரான சபாநாயகரும் அண்மையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து நீதிமன்றத்தில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்ற தீர்மானத்தினை அறிவித்துள்ளார். இது சட்டவாக்கத்துறையால் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

ஆகவே, இவ்வாறான அச்சுறுத்தலான நிலைமை நீடித்துச் செல்வதற்கு அனுமதிக்க முடியாது. அது நாட்டின் ஜனநாயகத்தினை கேள்விக்குட்படுத்தும் என்றார்.

ஜயம்பதி விக்கிரமரட்ன

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவிக்கையில், அண்மைக்காலமாக நிறைவேற்றத்துறையும், சட்டவாக்கத்துறையும் தவறான புரிதலுடன் நீதித்துறையின் மீது அதிகாரப் பிரயோகங்களை செய்து அச்சுறுத்துவது மிகத் தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உள்நாட்டுக் கடன்மறுசீரமைப்பு விடயத்தில் சட்டவாக்கத்துறையின் தலைமையான சபாநாயகரும், நிறைவேற்றுத்துறையின் தலைமையான ஜனாதிபதியும் நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்ற விடயத்தினை முன்வைத்துள்ளனர். இது அரசியலமைப்புக்கு முரணானதாகும்.

ரம்பண்டா எதிர் ரிவர்வலி டெவலப்மண்ட் போர்ட் வழக்கின்போது உலகப்புகழ் பூத்த நீதியரசரான சி.ஜி.வீரமந்திரி வழங்கிய தீர்ப்பில் மேற்படி அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. அத்தீர்ப்பில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தினை நீதிமன்றம் விமர்சனத்துக்கு உட்படுத்தவோ விசாரணைகளை முன்னெடுக்கவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையறைகள், தீர்மானங்களை விசாரணைக்குட்படுத்த முடியும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் சட்டவாக்கத்துறையின் தலைமை பிழையான முன்னுதாரணத்தினை வைத்து நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றார். அதாவது, அநுர பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்தபோது, நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டபோது அதற்கு அனுமதி வழங்கினார். அதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பத்தபோது, அவர் இடைக்கால உத்தரவின் நிராகரித்ததோடு,  சட்டவாக்கத்துறைக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாகவே குறிப்பிட்டார்.

ஆனால் பின்னரான காலத்தில், சந்திரகுப்த எதிர் சமல் ராஜபக்ஷ வழக்கின்போது வழங்கப்பட்ட தீர்ப்பின்போதும் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டம் சம்பந்தமாக நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்பதும், தீர்மானங்கள் மீது நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நீதித்துறையின் மீது சட்டவாக்கத்துறையும், நிறைவேற்றத்துறையும் அதிகாரங்கள் இல்லை என்று அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றமையானது நேரயாக அதன் சுயதீனத் தன்மையில் விடுக்கப்படும் அச்சுறுத்தலாம். இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையலாம் என்றார்.

சாலிய பீரிஸ்

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கையில், நிறைவேற்று துறையால் நீதித்துறைக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலானது நேரடியாக ஜனாதிபதியால் நீதித்துறைக்கு விடுகின்றதொரு அச்சுறுத்தலாகும். நீதிபதிகளால் குறித்த விடயம் சம்பந்தமாக வெளிப்படையாக பேச முடியாது. நீதிபதிகளால் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்த முடியாது. ஊடக அறிக்கைகளையும் வெளியிட முடியாது. வரலாற்று ரீதியாக சட்டத்தரணிகள் சமூகம் சட்டத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. அதனைச் சட்டத்தரணிகள் சமூகம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனம் நம் அனைவருக்கும் முக்கியமானதாகும். வெறுமனே உயர்நீதிமன்றத்தின் சுயாதீனம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நீதித்துறைக்கும் அவ்விடயம் பொருத்தமானதாகும். ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்தினை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகள் செயற்படவேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »