(நா.தனுஜா)
தமிழர் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், எனவே இலங்கைக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதை விடுத்து, இம்முறை கூட்டத்தொடரில் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான ஒரு மாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது.
இந்த அமர்வின் தொடக்க நாளான 11ஆம் திகதியன்று ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (31) சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் முறைமையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சார்பில் இரு அதிகாரிகளும், தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் சார்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அக்கட்சியின் பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது அண்மைய காலங்களில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், யதார்த்தபூர்வமாக அதற்குரிய நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை என்றும், பெருமளவான காணிகள் இன்னமும் படையினர்வசமே இருப்பதாகவும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர்.
அதுமாத்திரமன்றி, கடந்த சில மாதங்களாக வட, கிழக்கு மாகாணங்களில் தீவிரம் பெற்றுள்ள தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஐ.நா அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் நீண்டகால வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சில இடங்களில் இச்செயற்பாடுகள் ஜனாதிபதியின் உத்தரவை மீறி மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும் சில பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் கண்டும் காணாமல் விடப்படுவதாகவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் கூறினர்.
அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் தீர்வின்றித் தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம், கடந்த கால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
எனவே, எதிர்வரும் 11ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையில், இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட அவர்கள், இலங்கைக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை என்றும், இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை மீது வலுவான அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.